வீர,தீர செயல்புரிந்த சிறுமிகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்


வீர,தீர செயல்புரிந்த சிறுமிகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 7 Jan 2019 4:00 AM IST (Updated: 6 Jan 2019 10:50 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் வீரதீர செயல்புரிந்த சிறுமிகள் விருது பெற விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி,

தமிழக அரசு சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை மூலம் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், இளவயது திருமணங்களை தடுக்கவும், பாடுபட்டு வீர, தீர செயல்புரிந்த 18 வயதுக்குட்பட்ட சிறுமிக்கு மாநில விருது வழங்கப்பட உள்ளது. சிறுமிகளை சிறப்பிக்கும் வகையில் கடந்த ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி ஒவ்வொரு ஆண்டும் சேவை புரிந்து வரும் சிறந்த சிறுமிக்கு தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் பாராட்டு பத்திரமும், ரூ.1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட உள்ளது. அதன்படி, தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் விருது வழங்கிட 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளிடம் விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது.

விண்ணப்பிக்க வருகிற 10-ந்தேதி (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும். இதற்கான விண்ணப்பங்கள் தலைமை ஆசிரியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர், போலீஸ் துறை அதிகாரி, தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அலுவலர்கள் வாயிலாக உரிய முன்மொழிவுகளுடன் மாவட்ட சமூக நல அலுவலரிடம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

மாவட்டம் முழுவதிலும் இருந்து வரும் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு மாவட்ட கலெக்டர் பரிந்துரையுடன் சமூக நல ஆணையரகத்துக்கு பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்படும். மாவட்டங்களில் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மாநில அளவில் தேர்வுக்குழு மூலம் பரிசீலனை செய்யப்பட்டு, அனைத்து தகுதிகள் பெற்ற சிறுமிக்கு வருகிற 24-ந்தேதி நடக்கும் விழாவில் விருது வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story