நீலகிரி மாவட்டத்தில் 2 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு - கலெக்டர் தகவல்
நீலகிரி மாவட்டத்தில் 2 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது என்று கலெக்டர் தெரிவித்தார்.
ஊட்டி,
தமிழக அரசின் உத்தரவுப்படி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு, ரொக்க பணம் வழங்கும் நிகழ்ச்சி நீலகிரி மாவட்டம் குன்னூர் ரெயில்வே பணியாளர்கள் கூட்டுறவு அங்காடியில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சாந்தி ராமு எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி, முதல் கட்டமாக 43 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.1000 ரொக்கம் மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் 318 முழு நேர ரேஷன் கடைகள், 89 பகுதி நேர ரேஷன் கடைகள் என மொத்தம் 407 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 349 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். தமிழக அரசு உத்தரவின்படி நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் ரூ.2 கோடியே 67 லட்சத்து 46 ஆயிரத்து 215 மதிப்பில் பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.21 கோடியே 13 லட்சத்து 49 ஆயிரம் ரொக்கம் அனைத்துரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளில் இருந்தும், கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும் பொங்கல் பரிசு தொகுப்புகள் வினியோகம் செய்யும் வகையில் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. ரேஷன் கார்டுதாரர்களை பகுதியாக பிரித்து வினியோகம் செய்ய அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மதியம் 1.30 மணி முதல் மாலை 5 மணி வரையும் பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்க பணம் வழங்கப்படும். கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் மாலை 5 மணிக்குள் வருபவர்களுக்கு டோக்கன் முறையில் வழங்கப்படும். பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து, ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.15 மதிப்பில் துணிப்பை தமிழக அரசால் வழங்கப் படுகிறது.
மாற்றுத்திறனாளிகள், வயதானவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விடுபட்ட ரேஷன் கார்டுதாரர்கள் வருகிற 13 மற்றும் 14-ந் தேதிகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம். நீலகிரி மாவட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 1 லட்சத்து 91 ஆயிரத்து 475 ரேஷன் கார்டுதாரர்களுக்கு வேட்டி, சேலை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதில் சப்-கலெக்டர் ரஞ்சித் சிங், மாவட்ட வருவாய் அதிகாரி செல்வராஜ், குன்னூர் தாசில்தார் தினேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story