மயிலம் அருகே கல்லூரி பெண் காவலாளி வீட்டில் நகை-பணம் திருட்டு


மயிலம் அருகே கல்லூரி பெண் காவலாளி வீட்டில் நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 7 Jan 2019 3:45 AM IST (Updated: 6 Jan 2019 11:20 PM IST)
t-max-icont-min-icon

மயிலம் அருகே கல்லூரி பெண் காவலாளி வீட்டில் நகை-பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மயிலம், 

மயிலம் அருகே உள்ள கூட்டேரிப்பட்டு அம்மன்நகரை சேர்ந்தவர் விவேகானந்தன் மனைவி மங்கலட்சுமி(வயது 40). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் மங்கலட்சுமி வழக்கம்போல் தனது வீட்டை பூட்டிவிட்டு கல்லூரி பணிக்கு சென்று விட்டார். பின்னர் சிறிது நேரத்தில் மங்கலட்சுமியின் அண்ணன் வெங்கடேசன், மங்கலட்சுமியின் வீட்டு சாவியை வாங்கிக்கொண்டு அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் இதுபற்றி மங்கலட்சுமிக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் மங்கலட்சுமி வீட்டுக்கு விரைந்து வந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 7 பவுன் நகை, 12 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து நகை-பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. திருடுபோன நகை-பணத்தின் மதிப்பு ரூ.1½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்சுதர் தலைமையிலான போலீசார், வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story