புதுக்கோட்டை அருகே வேன்-லாரி நேருக்கு நேர் மோதல் அய்யப்ப பக்தர்கள் 9 பேர் பலி


புதுக்கோட்டை அருகே வேன்-லாரி நேருக்கு நேர் மோதல் அய்யப்ப பக்தர்கள் 9 பேர் பலி
x
தினத்தந்தி 7 Jan 2019 4:45 AM IST (Updated: 7 Jan 2019 12:08 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை அருகே வேனும், டிரைலர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், அய்யப்ப பக்தர்கள் 9 பேர் உள்பட 10 பேர் பலி ஆனார்கள். அவர்கள் ராமேசுவரம் கோவிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பிய போது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.

புதுக்கோட்டை,

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் காஜிபேட் கிராமத்தைச் சேர்ந்த 14 பேர் மாலை அணிந்து விரதம் இருந்து, கேரள மாநிலம் சபரி மலை அய்யப்பன் கோவிலுக்கு ஒரு சுற்றுலா வேனில் சென்றனர்.

வேனை அதே பகுதியை சேர்ந்த டிரைவர் ஒருவர் ஓட்டி வந்தார். அவர் மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளவில்லை.

அய்யப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த பின், தமிழகம் வந்து கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர்.

ராமேசுவரம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து சொந்த ஊர் செல்வதற்காக நேற்று பகலில் வேனில் புறப்பட்டனர். வேன் நேற்று மதியம் 2.15 மணி அளவில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டை அருகே காரைக்குடி-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது.

அப்போது புதுக்கோட்டையில் இருந்து காரைக்குடி நோக்கி ஒரு டிரெய்லர் லாரி வேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த டிரெய்லர் லாரியும் வேனும் திடீரென்று நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன.

விபத்து நடந்ததும் லாரியை நிறுத்தி விட்டு அதன் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த விபத்தில் வேன் அப்பளம் போல் நொறுங்கியது. அதில் இருந்த நாகராஜ் (வயது 35), மகேஷ் (28), குமார் (22), ஷாம் (22), பிரவீண் (24), கிருஷ்ணா (35) மற்றும் வேன் டிரைவர் ஆகிய 7 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலி ஆனார்கள். வேன் டிரைவரின் பெயர் விவரம் தெரியவில்லை.

மேலும் 8 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடியபடி அபய குரல் எழுப்பினர்.

இந்த விபத்தை கண்ட அப்பகுதி பொதுமக்கள் விரைந்து வந்தனர். மேலும் விபத்து குறித்து தகவல் அறிந்ததும் திருமயம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருமயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சாய் (22), சுரேஷ் (25)ஆஞ்சநேயலு ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

இதனால் பலியானவர் களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.

விபத்தில் பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு இன்று (திங்கட்கிழமை) பிரேத பரிசோதனை நடைபெறுகிறது.

படுகாயம் அடைந்த பூமாகவுடு (28), ராஜூ (28), வெங்கடேஷ் (35), சாய்லமால், நரேஷ் ஆகிய 5 பேருக்கு திருமயம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் சுகாதார துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், திருமயம் அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று, அங்கு அவர்களை பார்த்து ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், இறந்தவர்களின் உடல்களை அவர்களுடைய சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்கான செலவை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும் என்று தெரிவித்தார்.

திருமயம் ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின், 5 பேரும் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து நடந்த இடத்தை திருச்சி சரக டி.ஐ.ஜி. லலிதாலட்சுமி மற்றும் போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு போலீசார் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். அவர்கள் இன்று புதுக்கோட்டை வந்து சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விபத்துக்குள்ளான வேனை கிரேன் மூலம் போலீசார் மீட்டு சாலையோரம் நிறுத்தினர். டிரைலர் லாரியையும் அப்புறப்படுத்தினார்கள். இந்த விபத்தால் காரைக்குடி-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த விபத்து தொடர்பாக திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிரைலர் லாரி டிரைவரையும் தேடி வருகிறார்கள்.

Next Story