துடியலூர் அருகே தலையில் கல்லை போட்டு டிரைவர் படுகொலை
துடியலூர் அருகே தலையில் கல்லை போட்டு டிரைவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
துடியலூர்,
துடியலூர் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் ஊராட்சி பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ஆனந்த குமார் (வயது 37). இவர் பொக்லைன் எந்திர டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை அங்குள்ள முனியப்பன் கோவில் அருகே ஆனந்தகுமார் முகம் சிதைக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அருகில் ரத்த கறை படிந்த பாறாங்கல் கிடந்தது.
இதுகுறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு மணி, இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் ஆனந்த குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், ஆனந்த குமார் நேற்று காலை 9 மணியளவில் அங்குள்ள கோவில் அருகே சிலருடன் மது அருந்தியதும், அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆனந்த குமாரை சிலர் தாக்கி தலையில் கல்லை போட்டு கொலை செய்ததும் தெரியவந்தது. அவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள். துடியலூர் பகுதியில் பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story