ஈரோட்டில் லாட்டரி சீட்டு விற்பனையை ஒழிக்க வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை
ஈரோட்டில் லாட்டரி சீட்டு விற்பனையை முழுமையாக ஒழிக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு,
தமிழகத்தில் ஒரு நம்பர் லாட்டரி, சுரண்டல் லாட்டரி முறை இருந்து வந்தது. லாட்டரி சீட்டின் மீது பொதுமக்களுக்கு ஏற்பட்ட அதிகமான மோகத்தினால் தினக்கூலி வேலை செய்யும் தொழிலாளர்களின் குடும்பத்தினர் மிகவும் பாதிக்கப்பட்டனர். அவர்கள் தினமும் வாங்கிய சம்பளத்தில் பெரும் தொகையை லாட்டரி சீட்டு வாங்க செலவிட்டனர்.
அதிர்ஷ்டத்தை நம்பி ஏராளமானவர்கள் கடன் வாங்கி லாட்டரி சீட்டுகளை வாங்கினார்கள். இதனால் பெரும்பாலான குடும்பத்தினர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டனர். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு கடந்த 2003–ம் ஆண்டு தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டது.
லாட்டரி சீட்டுக்கு தடை விதித்து 15 ஆண்டுகளானாலும் விற்பனையை முழுமையாக நிறுத்த முடிவதில்லை. ஈரோடு மாநகர் பகுதியிலேயே லாட்டரி விற்பனை செய்தவர்கள் பலரை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள். ஆங்காங்கே லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதும், லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்களை ரோந்து செல்லும் போலீசார் கைது செய்வதும் வாடிக்கையாகி உள்ளது. ஆனாலும் விற்பனை முழுமையாக தடுக்கப்படவில்லை. எனவே லாட்டரி சீட்டு விற்பனையை முழுமையாக ஒழிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:–
ஈரோடு பஸ் நிலையம் பகுதி, சூரம்பட்டி, பெரியவலசு, மரப்பாலம், கருங்கல்பாளையம் உள்பட பல்வேறு இடங்களில் லாட்டரி சீட்டு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. காகிதத்தில் எண்களை எழுதி வைத்தும், கணினியில் அச்சிடப்பட்ட துண்டு சீட்டை வைத்தும் லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
இதை ஏராளமான தொழிலாளர்கள் வாங்கி ஏமாற்றம் அடைகின்றனர். மேலும், தொழிலாளர்கள் பலர் தங்களது குடும்ப செலவுக்கு பணத்தை கொடுப்பதைவிட லாட்டரி சீட்டு வாங்கவே அதிக பணத்தை செலவு செய்கின்றனர். ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் சட்டம்–ஒழுங்கை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறார். அதுபோல் லாட்டரி சீட்டை ஒழிக்க தனிப்படை அமைத்து கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.