ஈரோடு மாவட்டத்தில் 7 லட்சம் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வினியோகம்; அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்


ஈரோடு மாவட்டத்தில் 7 லட்சம் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வினியோகம்; அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
x
தினத்தந்தி 7 Jan 2019 4:30 AM IST (Updated: 7 Jan 2019 12:13 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் 7 லட்சம் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு பொருட்களை வினியோகிக்கும் பணியை அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

ஈரோடு,

தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்களுக்கு விலையில்லா வேட்டி–சேலை, பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.1,000 ஆகியன வழங்கப்படுகிறது. அதன்படி பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா ஈரோடு பி.பி.அக்ரஹாரத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு பொருட்களை வழங்கினார்கள். தொடர்ந்து ஈரோடு மாவட்டம் முழுவதும் 7 லட்சத்து 1 ஆயிரத்து 288 குடும்பத்தினருக்கு பொங்கல் தொகுப்பு பரிசு பொருட்களும், மொத்தம் ரூ.70 கோடியே 12 லட்சமும், 10 லட்சத்து 51 ஆயிரத்து 965 குடும்பத்தினருக்கு விலையில்லா வேட்டி–சேலைகளும் வழங்கப்பட உள்ளன.

விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசும்போது கூறியதாவது:–

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிக்கூடங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. ஆகிய வகுப்புகளை தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் வருகிற 21–ந் தேதி தொடங்கி வைக்கிறார்கள். இதேபோல் பள்ளிக்கல்வித்துறைக்காக தனி தொலைகாட்சியும் தொடங்கப்பட உள்ளது. மேலும், யு–டியூப் மூலமாக பாடங்களை வீட்டில் இருந்தபடியே பதிவிறக்கம் செய்யும் வசதியும் விரைவில் ஏற்படுத்தப்படும்.

ஈரோடு மாவட்டத்தில் ரூ.25 கோடி செலவில் சாலைகள் சீரமைக்கப்பட உள்ளன. இதேபோல் மேம்பாலம் கட்டுதல், ஊராட்சிக்கோட்டை கூட்டுக்குடிநீர் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

விழாவில் ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, அ.தி.மு.க. வர்த்தக அணி பிரிவு செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் கே.சி.பழனிசாமி, மனோகரன், ஜெகதீசன், ஜெயராஜ், முருகுசேகர், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் வீரக்குமார், பகுதி இணைச்செயலாளர்கள் நந்தகோபால், ஜெயராமன், மாவட்ட இளைஞர்–இளம்பெண்கள் பாசறை செயலாளர் மணிகண்டன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி பகுதி செயலாளர் கேபிள்ரமேஷ், முன்னாள் கவுன்சிலர் காவிரி செல்வம், பிரதிநிதி காவிரி முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பொங்கல் பரிசு பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் பலர் திரண்டு வந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பொங்கல் பரிசுகளை வாங்கி சென்றனர். கருங்கல்பாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story