நெல்லையில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் இதயம் விமானம் மூலம் சென்னை கொண்டு செல்லப்பட்டது


நெல்லையில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் இதயம் விமானம் மூலம் சென்னை கொண்டு செல்லப்பட்டது
x
தினத்தந்தி 7 Jan 2019 3:45 AM IST (Updated: 7 Jan 2019 12:18 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. இதயம் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள நோயாளிக்கு பொருத்தப்பட்டது.

நெல்லை, 

நெல்லையில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. இதயம் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள நோயாளிக்கு பொருத்தப்பட்டது.

வாலிபர் மூளைச்சாவு

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள டானா காளிபார்விளையை சேர்ந்தவர் கணபதி. இவருடைய மனைவி சாரதா. இவர்களுடைய மகன் பழனிக்குமார் (வயது 35). எம்.காம். படித்துள்ள இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. தந்தை இறந்து விட்டார். இதனால் தனது தாய் சாரதாவுடன் பழனிக்குமார் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி பழனிக்குமாரும், அவருடைய நண்பர் கணேசன் என்பவரும், பொங்கலையொட்டி வீட்டுக்கு வெள்ளையடிப்பதற்காக சுண்ணாம்பு வாங்க கீழஆம்பூருக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். டானா அருகில் சென்றபோது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார்சைக்கிள் இவர்கள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பழனிக்குமார், கணேசன் ஆகிய இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் கணேசன் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த நிலையில் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழனிக்குமார் நேற்று முன்தினம் இரவில் மூளைச்சாவு அடைந்தார்.

உடல் உறுப்புகள் தானம்

இந்த தகவலை அவருடைய தாய் சாரதாவிடம், நெல்லை மருத்துவ கல்லூரி டீன் கண்ணன், டாக்டர்கள் ராமசுப்பிரமணியன், செந்தில்குமார் ஆகியோர் தெரிவித்தனர். இதனை கேட்ட சாரதா கண்ணீர் விட்டு கதறி அழுதார். மேலும் அங்குள்ள மருத்துவ குழுவினர் சாரதாவிடம், உங்கள் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புகிறீர்களா? என்று கேட்டனர். அதற்கு அவர் கனத்த இதயத்துடன் சம்மதம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பழனிக்குமாரின் உடல் உறுப்புகளை தானம் எடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளில் மருத்துவக்குழுவினர் ஈடுபட்டனர். இதற்கான தகவல்கள் அனைத்து ஆஸ்பத்திரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டன.

சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கு இதயத்தையும், நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஒரு நோயாளிக்கு ஒரு சிறுநீரகமும், மதுரை ராஜாஜி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஒரு நோயாளிக்கு மற்றொரு சிறுநீரகமும், திருச்சி தனியார் ஆஸ்பத்திரியில் உள்ள ஒரு நோயாளிக்கு கல்லீரலையும் பொருத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு நோயாளிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். மேலும் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய ஆஸ்பத்திரிகளில் இருந்து டாக்டர்கள் குழுவினர் பழனிக்குமாரின் உடல் உறுப்புகளை பெற்றுச்செல்வதற்காக ஆம்புலன்ஸ்களில் நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர்.

இதயம் சென்னைக்கு...

மதியம் 2.20 மணிக்கு பழனிக்குமாரின் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. முதலில் இதயம் பாதுகாப்பாக அதற்காக கொண்டு வரப்பட்ட பெட்டியில் வைத்து எடுத்து வரப்பட்டு 2.54 மணிக்கு ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த ஆம்புலன்ஸ் முன்பாக போலீஸ் ஜீப் சென்றது. இதையொட்டி பாளையங்கோட்டையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையம் வரை சாலையில் எந்தவித இடையூறுகளும் ஏற்படாதவாறு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தூத்துக்குடி விமான நிலையத்தை ஆம்புலன்ஸ் சென்றடைந்ததும், அங்கிருந்து சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து போலீசார் உதவியுடன், அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு நோயாளிக்கு இதயம் பொருத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மதுரை ராஜாஜி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஒரு சிறுநீரகமும், திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கல்லீரலும் ஆம்புலன்ஸ்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டன.

சிறுநீரகம் பொருத்தப்பட்டது

நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு நோயாளிக்கு, ஒரு சிறுநீரகத்தை டாக்டர்கள் கண்ணன், ராமசுப்பிரமணியன், செந்தில்குமார், திருவாசகமணி, மங்கையர்கரசி உள்ளிட்ட டாக்டர்கள் குழுவினர் பொருத்தினர். மேலும் கண்கள், தோல் ஆகியவைகளும் தானமாக பெறப்பட்டன.

நுரையீரலுக்கு தேவையான நோயாளி இல்லாததால் நுரையீரல் பெறப்படவில்லை. நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்து வந்தாலும், பழனிக்குமாரின் உடல் உறுப்புதான் முதன் முதலாக தானமாக பெறப்பட்டு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதையொட்டி நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நேற்று காலை முதல் மாலை 3.15 மணி வரை பெரும் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story