மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்களுக்கு ஊதிய நிலுவைத்தொகையை வழங்க வேண்டும்


மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்களுக்கு ஊதிய நிலுவைத்தொகையை வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 6 Jan 2019 10:45 PM GMT (Updated: 6 Jan 2019 6:50 PM GMT)

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

கொரடாச்சேரி,

கொரடாச்சேரி ஒன்றியத்தில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள் மற்றும் ஊராட்சி தூய்மை பணியாளர்கள் தொழிற்சங்க பேரவைக்கூட்டம் கொரடாச்சேரியில் நடந்தது. கூட்டத்திற்கு சங்க நிர்வாகி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சந்திரசேகர ஆசாத் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

அனைத்து மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி இயக்குனர்களுக்கு விலைவாசிக்கேற்ற ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஊதிய நிலுவைத்தொகை வழங்க வேண்டும். மினி தொட்டி இயக்குனர்களுக்கு மாத ஊதியமாக ரூ.2,040 வழங்க வேண்டும்.

ஊராட்சி தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் சங்க மாவட்ட செயலாளர் தங்கவேல், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ஜோசப், ஒன்றிய செயலாளர் கேசவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சங்க ஒன்றிய செயலாளர் சிவானந்தம் வரவேற்றார். முடிவில் துப்புரவு பணியாளர் சங்க செயலாளர் நடராஜன் நன்றி கூறினார்.

Next Story