தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை


தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 6 Jan 2019 10:45 PM GMT (Updated: 6 Jan 2019 7:08 PM GMT)

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சுரேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாகப்பட்டினம்,

நாகை கடைவீதியில் உள்ள வணிக வளாகங்கள், சில்லறை விற்பனை கடைகள், உணவகங்கள், பேக்கரிகள், பழக்கடைகள், அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் கலெக்டர் சுரேஷ்குமார் நேரில் சென்று பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதை தொடர்ந்து கலெக்டர் சுரேஷ்குமார் கூறியதாவது:-

நாகை மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்கள், 8 பேருராட்சிகளில் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்துவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீதும், விற்பனை செய்யும் வணிக நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் கலெக்டர் வழங்கினார். இந்த ஆய்வின் போது, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராமசுப்பு, உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன், நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், நாகை தாசில்தார் இளங்கோவன் மற்றும் அதிகாரிகள், வணிகர்கள், பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.

Next Story