அய்யன்கொல்லியில் கேரள அரசு பஸ் மோதி மூதாட்டி சாவு


அய்யன்கொல்லியில் கேரள அரசு பஸ் மோதி மூதாட்டி சாவு
x
தினத்தந்தி 7 Jan 2019 4:15 AM IST (Updated: 7 Jan 2019 12:46 AM IST)
t-max-icont-min-icon

அய்யன்கொல்லியில் கேரள அரசு பஸ் மோதி மூதாட்டி உயிரிழந்தார்.

பந்தலூர்,

பந்தலூர் தாலுகா கொளப்பள்ளி அருகே குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் சின்னதம்பி. இவரது மனைவி சிவயோகம்(வயது 65). இவர் நேற்று மாலை 5 மணிக்கு அய்யன்கொல்லியில் உள்ள பயணியர் நிழற்குடைக்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றார். அப்போது சுல்தான்பத்தேரிக்கு செல்வதற்காக கேரள அரசு பஸ் பயணியர் நிழற்குடை முன்பு நின்று கொண்டிருந்தது.

இந்த சமயத்தில் பக்கவாட்டில் உள்ள கண்ணாடியை பார்த்து கொண்டு பஸ்சை டிரைவர் மெதுவாக ஓட்டினார். அப்போது சாலையின் குறுக்கே வந்த சிவயோகம் மீது பஸ் மோதியது. இதில் நிலைகுலைந்த சிவயோகம் அதே இடத்தில் கீழே விழுந்தார். இதை கண்ட பொதுமக்கள் கூச்சலிட்டு பஸ்சை நிறுத்துமாறு சத்தம் போட்டனர். ஆனால் பஸ் டிரைவர் கவனிக்காமல் வேகமாக ஓட்டினார்.

இந்த சமயத்தில் கீழே விழுந்த சிவயோகம் மீது பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் ரத்த வெள்ளத்தில் சிவயோகம் உயிருக்கு ஆபத்தான நிலையில் துடித்தவாறு கிடந்தார். இதை கண்ட கேரள அரசு பஸ் டிரைவர் மற்றும் நடத்துனரும் பஸ்சை நிறுத்தி விட்டு தப்பி ஓடினர். மேலும் அப்பகுதி மக்கள் ஆபத்தான நிலையில் கிடந்த சிவயோகத்தை மீட்டு மேப்பாடி தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிவயோகத்தை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதனிடையே அய்யன்கொல்லிக்கு வந்த மற்றொரு கேரள அரசு பஸ்சை அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தி சாலை மறியல் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவல் அறிந்த சேரம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதி அளித்தனர். இதை ஏற்று சிறிது நேரத்தில் மறியலை பொதுமக்கள் கைவிட்டனர். இது குறித்து சேரம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் கேரள அரசு பஸ்சை பறிமுதல் செய்தனர். 

Next Story