நாசரேத் அருகே கால்வாயில் மூழ்கி பெண் சாவு தண்ணீரில் தத்தளித்த 3 மகள்களை காப்பாற்றியவருக்கு நேர்ந்த சோகம்


நாசரேத் அருகே கால்வாயில் மூழ்கி பெண் சாவு தண்ணீரில் தத்தளித்த 3 மகள்களை காப்பாற்றியவருக்கு நேர்ந்த சோகம்
x
தினத்தந்தி 7 Jan 2019 3:00 AM IST (Updated: 7 Jan 2019 12:47 AM IST)
t-max-icont-min-icon

நாசரேத் அருகே கால்வாயில் குளித்த பெண் தண்ணீரில் மூழ்கி உயிர் இழந்தார். தண்ணீரில் தத்தளித்த 3 மகள்களை காப்பாற்றி விட்டு அவர் பரிதாபமாக இறந்து போனது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தென்திருப்பேரை, 

நாசரேத் அருகே கால்வாயில் குளித்த பெண் தண்ணீரில் மூழ்கி உயிர் இழந்தார். தண்ணீரில் தத்தளித்த 3 மகள்களை காப்பாற்றி விட்டு அவர் பரிதாபமாக இறந்து போனது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆலய பிரதிஷ்டை விழா

நாசரேத் மணி நகரை சேர்ந்தவர் ஜான்சிரோன். இவருடைய மனைவி பிரேமகுமாரி (வயது 40). ஜான்சிரோன் சென்னை குரோம்பேட்டையில் தோல் பதனிடும் நிறுவனம் வைத்து உள்ளார். இவர்களுக்கு 3 மகள்கள். சென்னையில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர்கள், கடந்த சில நாட்களுக்கு முன்பு நாசரேத் மணிநகர் பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலய பிரதிஷ்டை பண்டிகையில் கலந்து கொள்வதற்காக ஊருக்கு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை, மணி நகரில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கடையனுடை கால்வாயில் குளிப்பதற்காக பிரேமகுமாரி தனது 3 மகள்களுடன் காரில் வந்தார். கார் டிரைவர் கால்வாய்க்கு சற்று தூரத்தில் நின்று கொண்டு இருந்தார்.

தண்ணீரில் மூழ்கி...

அவர்கள் அனைவரும் கால்வாயில் குளித்து கொண்டு இருந்தனர். அப்போது பிரேமகுமாரியின் மகள்கள் 3 பேரும் திடீரென தண்ணீரில் தத்தளித்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த பிரேமகுமாரி அவர்களை போராடி காப்பாற்றினார். இருந்த போதும் அவரால் கரை திரும்ப முடியவில்லை. தண்ணீரில் அவர் மூழ்கினார்.

இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து ஆழ்வார்திருநகரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story