சென்னையில் மாரத்தான் ஓட்டம் கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி வாயை கட்டிக்கொண்டு ஓடினார்


சென்னையில் மாரத்தான் ஓட்டம் கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி வாயை கட்டிக்கொண்டு ஓடினார்
x
தினத்தந்தி 7 Jan 2019 4:00 AM IST (Updated: 7 Jan 2019 12:57 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசு 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. பிளாஸ்டிக் தடைக்கு ஆதரவாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சென்னையில் நேற்று மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

சென்னை,

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இருந்து ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வி.ஜி.பி. பொழுதுபோக்கு பூங்கா வரை பல்வேறு சாலைகள் வழியாக 42 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்த இந்த மாரத்தான் ஓட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி இதில் கலந்து கொண்டு வாயை கட்டிக் கொண்டு 42 கிலோ மீட்டர் தூரம் வரை ஓடினார்.

மாரத்தானில் கலந்து கொண்டு ஓடியவர்கள் தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகையை எடுத்துச் சென்றனர்.

இதுபற்றி கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி கூறுகையில், வாயைக் கட்டி கொண்டு 42 கி.மீ. தூரம் ஓடுவது சாதாரண விஷயம் அல்ல. ஓடும்போது நமது உடலுக்கு அதிகளவில் ஆக்சிஜன் தேவைப்படும். அப்போது வாய் வழியாக மூச்சு விட்டால் தான் ஆக்சிஜன் அதிகளவில் கிடைக்கும். ஆனால் நான் இடைவிடாத பயிற்சி மேற்கொண்டு, வாயைக்கட்டி கொண்டு மூக்கு வழியாக மூச்சுவிட்டப்படி ஓட்டத்தில் பங்கேற்றேன். நான் ஓடியதை ‘ஆசியா சாதனை புத்தகம்’ என்ற அமைப்பு சார்பில் வீடியோ எடுத்தனர். அதில், எனது பெயரையும் இடம் பெற செய்வதாக தெரிவித்துள்ளனர் என்றார்.

Next Story