திருச்சியில் விண்வெளி தொழில்நுட்ப மையம்: சந்திரயான்-2 விண்கலம் இன்னும் 3 மாதத்தில் விண்ணில் ஏவப்படும்


திருச்சியில் விண்வெளி தொழில்நுட்ப மையம்: சந்திரயான்-2 விண்கலம் இன்னும் 3 மாதத்தில் விண்ணில் ஏவப்படும்
x
தினத்தந்தி 6 Jan 2019 11:00 PM GMT (Updated: 6 Jan 2019 7:34 PM GMT)

திருச்சியில் விண்வெளி தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும் என்றும், சந்திரயான்-2 விண்கலம் இன்னும் 3 மாதத்தில் விண்ணில் ஏவப்படும் என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

திருச்சி,

இணையதளம் உபயோகிப்பதில் உலக அளவில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. நாட்டில் இணையதளத்தின் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இஸ்ரோ மூலம் ஏற்கனவே ஜி-சாட்-19, ஜி-சாட்-11, ஜி-சாட்-29 ஆகிய செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி நிலை நிறுத்தப்பட்டுள்ளன. அடுத்த வருடம் (2020) ஜி-சாட்-20 செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதன் மூலம் நாட்டில் இணையதளத்தின் வேகம் மேலும் அதிகரிக்கும். கிராமப்புறப்பகுதிகளில் இணைய சேவை மேலும் எளிதில் கிடைக்கும்.

சந்திரயான்-2 விண்கலம் இன்னும் 3 மாதத்தில் விண்ணில் ஏவப்படும். இதனை கடினமான இடத்தில் நிலைநிறுத்த உள்ளோம். மற்ற நாட்டினர் விண்ணில் எளிதான இடங்களில் செயற்கை கோள்களை நிறுவி வருகின்றனர். ஆனால் நாம் கடினமான இடத்தில் நிலை நிறுத்த உள்ளோம். உலகிலேயே குறைந்த செலவிலான எஸ்.எஸ்.எல்.வி. ஏவுகணை சோதனை செய்யப்பட உள்ளது.

நாட்டில் எலக்ட்ரானிக் பொருட்களின் இறக்குமதி அதிகமாக உள்ளது. இதனை தவிர்க்க எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி கண்டுபிடிப்பில் அதிகம் ஈடுபட வேண்டும்.

நாட்டில் அடுத்த நான்காண்டுகளில் 30 பி.எஸ்.எல்.வி., 10 ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் விண்ணில் ஏவ ரூ.10 ஆயிரத்து 900 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இஸ்ரோவின் 23 திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.30 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி உள்ளது.

விண்வெளிக்கு 2022-ம் ஆண்டில் மனிதர்களை அனுப்ப இஸ்ரோ பணிகளை தொடங்கி மேற்கொண்டு வருகிறது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதில் உலக அளவில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்குள் விண்வெளி பயணத்திற்கான விமானம் தயாராகும்.

இஸ்ரோவின் விண்வெளி ஆய்வு செயல்பாடுகளை நாடு முழுவதும் பரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டில் 6 இடங்களில் விண்வெளி தொழில்நுட்ப மையம் (இங்குபேசன் சென்டர்) அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் அகர்தலா என்.ஐ.டி., ஜம்மு காஷ்மீர் ஆகிய இடங்களில் 2 மையம் தொடங்கப்பட்டுள்ளது. மற்ற 4 மையங்களில் ஒரு மையம் திருச்சியில் அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார். 

Next Story