மத்திய அரசின் ஊதுகுழலாக கவர்னர் செயல்படுகிறார்; அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் குற்றச்சாட்டு
மத்திய அரசின் ஊதுகுழலாக கவர்னர் கிரண்பெடி செயல்படுவதாக அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் குற்றஞ்சாட்டி உள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன கவுரவ தலைவர் பாலமோகன், பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:–
மத்திய அரசு நிறைவேற்ற வேண்டிய 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், புதுச்சேரி அரசு நிறைவேற்ற வேண்டிய 33 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாளை, நாளை மறுநாள் (திங்கள், செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ள வேலைநிறுத்தத்தில் அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனமும் கலந்துகொள்வது என்று முடிவு செய்துள்ளது.
புதுவை அரசுத்துறைகளில் 7 ஆயிரத்து 500 பதவிகள் காலியாக இருப்பதாக முதல்–அமைச்சர் அறிவித்துள்ள நிலையில் வெறும் 800 பதவிகள் மட்டுமே நிரப்பப்பட உள்ளதாக தெரிகிறது. அதுவும் பெரும்பாலும் ஒப்பந்த ஊழியர்களாக நிரப்பப்பட உள்ளனர். அதே நேரத்தில் பல ஆண்டுகளாக உள்ளாட்சித்துறை, கூட்டுறவு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தினக்கூலி, பகுதிநேர, தொகுப்பூதிய, ஒப்பந்த, வவுச்சர் மற்றும் கவுரவ ஊழியர்களை பணிநிரந்தரம் செய்வதை தவிர்த்து வருகிறது.
இதையெல்லாம் முறைப்படுத்த வேண்டிய கவர்னர் கிரண்பெடி, புதுச்சேரி அரசின் பட்ஜெட்டில் அரசு சார்பு நிறுவனங்களுக்கு தகுந்த நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும் நிர்வாக ரீதியிலான குறைபாடுகளை காரணம்காட்டி ஊழியர்களுடைய ஊதியத்தை தாமதப்படுத்தி வருகிறார். பல நிறுவனங்கள் சீரழிவதற்கு கொல்லைப்புற நியமனங்களும், தவறான கொள்கை முடிவுகளை எடுத்தது தான் காரணம். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் ஊழியர்களை பாதிப்புக்குள்ளாக்குவது ஏற்புடையதல்ல.
நிதி சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும் என்று கூறிவரும் கவர்னர், மத்திய அரசு புதுச்சேரிக்கான பழைய கடனை தள்ளுபடி செய்தல், 7–வது ஊதியக்குழு அமலாக்க நிதி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் செயல்படாமல் மத்திய அரசின் ஊதுகுழலாக செயல்பட்டு வருவது ஏற்புடையதல்ல.
நாளை (செவ்வாய்கிழமை) புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு தர்ணா போராட்டமும், 9–ந்தேதி கம்பன் கலையரங்கில் அனைத்து பிரிவு ஊழியர்களும் ஊர்வலமாக சென்று சட்டசபை முன்பு மறியல் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.