திருமணம் செய்ய மறுத்ததால் பெண் சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்த முயற்சி சென்னையில், ஊர்க்காவல்படை வீரர் கைது


திருமணம் செய்ய மறுத்ததால் பெண் சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்த முயற்சி சென்னையில், ஊர்க்காவல்படை வீரர் கைது
x
தினத்தந்தி 7 Jan 2019 4:30 AM IST (Updated: 7 Jan 2019 1:22 AM IST)
t-max-icont-min-icon

திருமணம் செய்ய மறுத்ததால் பெண் சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்ததாக, சென்னையில் ஊர்க்காவல்படை வீரரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில், பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் மணிமேகலை(வயது 24). விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் இவரது சொந்த ஊராகும். இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. இவரது கணவரும் குழந்தையும் சொந்த ஊரில் வாழ்கிறார்கள். மணிமேகலை நுங்கம்பாக்கம் போலீஸ் குடியிருப்பில் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்.

இவர் வேலூர் மாவட்டம் காட்பாடியில், சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கான பயிற்சியில் ஈடுபட்டபோது, அங்கு ஊர்க்காவல்படை வீரராக பணியாற்றிய பாலச்சந்திரன் என்பவரோடு நட்பு ரீதியில் பழகினார். பாலச்சந்திரன் அதைக் காதலாக எடுத்துக் கொண்டார். ஆனால் மணிமேகலை பாலச்சந்திரனை காதலிக்கவில்லை. பாலச்சந்திரன் ஒருதலைக் காதலில் ஈடுபட்டார். அதன்பிறகு மணிமேகலை சென்னை நுங்கம்பாக்கத்தில் வேலைக்கு சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார். அவருக்கு திருமணமாகி குழந்தையும் பிறந்துவிட்டது.

ஆனால், பாலச்சந்திரன் மணிமேகலை மீதான காதலை விடவில்லை. தொடர்ந்து செல்போனில் பேசி தனது காதலை தெரிவித்தார். மணிமேகலைக்கு திருமணம் ஆனது தெரிந்தும், கணவன், குழந்தையை விட்டுவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பாலச்சந்திரன் வற்புறுத்தி வந்தார். சில நேரங்களில் சென்னைக்கு வந்தும் மணிமேகலைக்கு தொல்லை கொடுத்தார்.

உனது கணவரையும் குழந்தையையும் கொலை செய்து விடுவேன் என்று அடிக்கடி மிரட்டினார். ஆனால் மிரட்டலுக்கு அடிபணியாமல் மணிமேகலை பாலச்சந்திரனின் காதலை உறுதியாக ஏற்க மறுத்துவிட்டார்.

இந்தநிலையில், நேற்றுமுன்தினம் இரவு பாலச்சந்திரன் மணிமேகலையை சந்திக்க சென்னை வந்தார். அப்போது அவரை பாலச்சந்திரன் கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. எழும்பூர் போலீஸ் நிலையம் அருகே இந்த சம்பவம் நடந்தது. மணிமேகலை அலறி அடித்துக் கொண்டு எழும்பூர் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து விட்டார். தன்னை காப்பாற்றும்படி, அங்கிருந்த போலீசாரிடம் கூறினார்.

உடனே போலீசார் விரைந்து சென்று கத்தியுடன் நின்று கொண்டிருந்த பாலச்சந்திரனை கைது செய்தனர். அவரிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் போலீசார் பாலச்சந்திரன் மீது கொலைமுயற்சி உள்பட 3 சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பாலச்சந்திரன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story