பணகுடி அருகே பரபரப்பு கிணற்றில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த சிறுமி கொலையா? போலீசார் விசாரணை
பணகுடி அருகே கிணற்றில் அழுகிய நிலையில் சிறுமி பிணமாக கிடந்தாள். அவள் கொலை செய்யப்பட்டாளா? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணகுடி,
பணகுடி அருகே கிணற்றில் அழுகிய நிலையில் சிறுமி பிணமாக கிடந்தாள். அவள் கொலை செய்யப்பட்டாளா? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காணாமல் போன சிறுமி
சென்னை பூந்தமல்லியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 48). அவருடைய மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு குழந்தை இல்லை. ஆகையால் தங்கள் உறவுக்கார பெண்ணான அபிராமி (15) என்ற சிறுமியை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். ஊர் ஊராக சென்று குறி சொல்லும் தொழில் செய்து வந்த பாலகிருஷ்ணன், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள தெற்கு வள்ளியூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி தொழில் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 18-ந் தேதி வீட்டு வேலையை சரியாக செய்யவில்லை என்று பாலகிருஷ்ணன், அபிராமியை கண்டித்துள்ளார். இதனால் சிறுமி யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு காணாமல் போய்விட்டாள். பல இடங்களில் தேடியும் அபிராமியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து பாலகிருஷ்ணன் போலீசிலும் புகார் தெரிவிக்கவில்லை.
கிணற்றில் பிணமாக மிதந்தாள்
இந்த நிலையில் தெற்கு வள்ளியூர் ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள கிணற்றில் சிறுமியின் பிணம் அழுகிய நிலையில் மிதப்பதாக பணகுடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார், தீயணைப்பு படையினர் உதவியுடன் பிணத்தை கைப்பற்றினர். பின்னர் பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் டேவிட் ரவிராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், காணாமல் போன சிறுமி அபிராமி என்பது தெரியவந்தது. அவள் கொலை செய்யப்பட்டாளா? அல்லது கால் தவறி கிணற்றில் விழுந்து இறந்தாளா? ஆகிய கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story