வேலைநிறுத்த போராட்டத்தால் பொங்கல் பண்டிகையையொட்டி பஸ்கள் இயக்கத்தில் தடை இருக்காது அமைச்சர் பேட்டி


வேலைநிறுத்த போராட்டத்தால் பொங்கல் பண்டிகையையொட்டி பஸ்கள் இயக்கத்தில் தடை இருக்காது அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 6 Jan 2019 11:00 PM GMT (Updated: 6 Jan 2019 8:29 PM GMT)

தொழிற்சங்கத்தினரின் வேலை நிறுத்த போராட்டத்தால் பொங்கல் பண்டிகையையொட்டி பஸ்கள் இயக்கத்தில் எந்ததடையும் இருக்காது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

கரூர்,

தொழிற்சங்கத்தினர் வருகிற 8, 9-ந்தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக கூறியிருக்கின்றனர். அண்ணா தொழிற்சங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள், பொதுமக்களின் நலன் கருதி அதில் பங்கேற்கமாட்டார்கள். இதனால் பொங்கல் பண்டிகையையொட்டி பஸ்கள் இயக்கத்தில் எந்த தடையும் இருக்காது. பஸ்கள் வழக்கம் போல் ஓடும். மேலும் பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மொபைல் டாய்லெட்டானது உரிய தண்ணீர் வசதியுடன் செய்யப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இலவச பஸ் பயண அட்டை இன்னும் சில நாட்களில் முழுவதுமாக வழங்கப்பட்டு விடும். எனினும் பள்ளி சீருடை அணிந்திருந்தால் அரசு பஸ்களில் மாணவ-மாணவிகளிடம் போக்குவரத்துக் கழக கண்டக்டர்கள் பணம் கேட்பதில்லை.

திருவாரூர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். டி.டி.வி.தினகரன் கட்சியை பார்த்து, அ.தி.மு.க.-தி.மு.க. பயப்படுகிறது என கூறுவது வேடிக்கையாக உள்ளது. ஆர்.கே.நகரில் ரூ.20 நோட்டை காண்பித்து வெற்றி பெற்று விட்டார். மற்ற தேர்தல் வரட்டும் பார்க்கலாம். அதிலும் திருவாரூர் தொகுதியில் 20 ரூபாய் நோட்டு வியூகம் எடுபடாது. அ.தி.மு.க.வை யாராலும் அவ்வளவு எளிதில் அசைத்து கூட பார்க்க முடியாது. முதல்-அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சர் ஆகியோர் திருவாரூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை விரைவில் அறிவிப்பர். இன்று (திங்கட்கிழமை) மாநகர டவுன் பஸ்சான ரெட் பஸ் உள்ளிட்ட புதிதாக 550 பஸ்களை சென்னையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story