பொங்கல் பண்டிகையையொட்டி தரகம்பட்டி பகுதியில் மண்பானை தயாரிக்கும் பணி தீவிரம்


பொங்கல் பண்டிகையையொட்டி தரகம்பட்டி பகுதியில் மண்பானை தயாரிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 6 Jan 2019 10:30 PM GMT (Updated: 6 Jan 2019 8:39 PM GMT)

பொங்கல் பண்டிகையையொட்டி தரகம்பட்டி பகுதியில் மண்பானை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தரகம்பட்டி,

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை உலகத்தில் உள்ள தமிழர்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடுவர். உழைக்கும் மக்கள் இயற்கை, தெய்வங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஆடி மாதத்தில் விதைத்த பயிர்களில் விளைந்த தானியங்களை அறுவடை செய்து அதில் கிடைத்த புத்தரிசியை கொண்டு புதிதாக தயாரிக்கப்பட்ட மண்பானையில் பச்சரிசி, வெல்லம் ஆகியவற்றை கொண்டு பொங்கல் வைத்து, கரும்பு, மஞ்சள் கொத்து வைத்து சூரியனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் படைத்து கொண்டாடி வருகின்றனர்.

இந்த பண்டிகையின் முக்கிய அங்கமாக மண்பானை உள்ளது. மண்பாண்ட தொழிலாளர்கள் களிமண்ணை தண்ணீருடன் சேர்த்து நன்கு குழைக்கின்றனர்.

பின்னர் பானை செய்யும் உருளையை கொண்டு தங்களது கை வண்ணத்தில் வடிவமைத்து காய வைக்கின்றனர். பின்னர் வைக்கோல், தென்னை நார் கொண்டு அதன் மீது பானையை அடுக்கி சூடேற்றுகின்றனர். இவ்வாறு தயாராகும் பானைகள் பொங்கல் பண்டிகைக்கு முன்பு ஊர் ஊராக எடுத்துச்சென்று விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சிலநாட்களே உள்ள நிலையில்் தரகம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான பழனிசெட்டியூர், வரவணை, பால்மடைபட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர் ஒருவர் கூறுகையில், முன்பு மண்பாண்டங்களில் செய்யப்பட்ட பாத்திரங்களை பயன்படுத்தியதால் நம் முன்னோர்கள் நோய் நொடியின்றி நீண்ட ஆயூளோடு வாழ்ந்து வந்தனர். தற்போது காலமாற்றத்தினால் நவீன உலகமாக மாறிவிட்டது. பொங்கல் பண்டிகை அன்று கூட மண்பானை பயன்படுத்தாமல் சிலர் சில்வர் பாத்திரங்களை பயன்படுத்த தொடங்கி விட்டனர்.இருந்த போதிலும் பலர் பொங்கல் மற்றும் திருவிழா காலங்களில் மண்பானையை பயன்படுத்துகிறனர்். தற்போது மண்பாண்டத்தின் பயன்பாடு மிகவும் குறைந்து விட்டது. எனவே மண்பாண்டத்தின் பயன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினால் பொதுமக்கள் மண்பாண்டத்தை பயன்படுத்த தொடங்குவார்கள். இதனால் மண்பாண்ட தொழிலாளர்களான எங்கள் வாழ்வாதாரம் மேன்மை அடையும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story