பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி 1851 பேர் பங்கேற்ற மாரத்தான் போட்டி
பட்டாசு மற்றும் அதனை சார்ந்த தொழில்களை பாதுகாக்க வலியுறுத்தி சிவகாசியில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 1851 பேர் கலந்து கொண்டனர்.
சிவகாசி.
சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு இருப்பதால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த தொழில் மற்றும் இதைச் சார்ந்த தொழில்களை பாதுகாக்க கோரி சிவகாசியில் பட்டாசு நகர் ரோட்டரி சங்கம் சார்பில் நேற்று காலை மாரத்தான் போட்டி நடைபெற்றது. பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என 3 பிரிவுகளில் இந்த போட்டி நடைபெற்றது.
சிவகாசி முஸ்லிம் பள்ளியில் இருந்து இந்த மாரத்தான் போட்டி தொடங்கியது. இதை சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், ரோட்டரி சங்கத்தின் மாவட்ட ஆளுநர் ராஜகோபாலன், ஜேசீஸ் மெட்ரிக் பள்ளி முதல்வர் சித்ராஜெயந்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் 1851 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். போட்டி ஜேசீஸ் பள்ளியில் முடிந்தது. பின்னர் ஜேசீஸ் பள்ளியில் நடைபெற்ற விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தொகை, சான்றிதழ்கள், டி–சர்ட் என 95 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த மாரத்தான் போட்டியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியை சேர்ந்த 50–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் பெரம்பலூரை சேர்ந்த ஒரு கை இல்லாத மாற்றுத்திறனாளி வாலிபர் கலைச்செல்வம் கலந்து கொண்டு 7–வது பரிசு பெற்றார். இவரை போல் சிவகாசியை சேர்ந்த செந்தியம்மாள் என்ற 80 வயது மூதாட்டியும் கலந்து கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அவருக்கு விழா அமைப்பாளர்கள் சார்பில் கவுரவ பரிசு வழங்கப்பட்டது.