3 லட்சத்து 89 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு; அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்


3 லட்சத்து 89 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு; அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 7 Jan 2019 4:30 AM IST (Updated: 7 Jan 2019 2:18 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் பொங்கல் பண்டிகையையொட்டி 3 லட்சத்து 89 ஆயிரத்து 422 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.

சிவகங்கை,

பொங்கல் பண்டிகையையொட்டி சிவகங்கை மாவட்ட கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் மூலம் தமிழகஅரசின் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் தலா ரூ.ஆயிரம் ரொக்கம் வழங்கும் நிகழ்ச்சி கல்லலை அடுத்த நடராஜபுரத்தில் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடந்தது. சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர்.பிஆர்.செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். கூட்டுறவு இணைபதிவாளர் ஆரோக்கிய சுகுமார் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் பாஸ்கரன் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் வழங்கி பேசியதாவது:– இந்தஆண்டு மாவட்டத்தில் வறட்சியால் விளைச்சல் இல்லை. மாவட்டத்தில் சில இடங்களில் குடிக்க தண்ணீர் இல்லை. தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களை விட சிவகங்கை மாவட்டத்தில் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடுவோம்.

இந்த பொங்கலை பாகுபாடின்றி அனைவரும் கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க உத்தரவிட்டு அதில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சக்கரை, 2 அடி நீள கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் இவற்றுடன் விலையில்லா வேட்டி, சேலையும் சேர்த்து வழங்குவதுடன் தலா ரூ.1,000 ரொக்கம் வழங்க முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு 3 லட்சத்து 89ஆயிரத்து 422 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படஉள்ளது. மாவட்டத்தில் உள்ள மொத்தம் 829 நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. வருகிற 12–ந்தேதி வரை அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வழங்கப்படுகின்றன. மக்கள் சிரமமின்றி சென்று வர ஏதுவாக பகுதிவாரியாக பிரிக்கப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட பகுதிகளுக்கு அன்றையதினம் வழங்கும் விவரத்தை விளம்பரப்படுத்தி குடும்ப அட்டைதாரர்கள் எளிதாக சிரமமின்றி வாங்கிச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி 10 கடைக்கு ஒரு கண்காணிப்பு அலுவலர் வீதம் பணி நியமிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருவதுடன் மேலும் துணை கலெக்டர் அளவில் அலுவலர்கள் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருவார்கள்.குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.1,000 ரொக்கமும் கட்டாயம் வழங்கப்படும். மேலும் குடும்ப அட்டையை தவறவிட்டு புதிதாக குடும்ப அட்டை நகல் கேட்டு விண்ணப்பித்துள்ளவர்கள் ஆதார் அடையாள அட்டையை எடுத்துச்சென்று காண்பித்து பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, ராமநாதபுரம் மாவட்ட பால் கூட்டுறவு சங்கத்தலைவர் அசோகன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் பழனீஸ்வரி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் சேவியர்தாஸ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சக்திவேல் கூட்டுறவு சங்க இயக்குனர்கள் குணசேகரன், கருணாகரன், சசிகுமார்,பாண்டி, ஜெயப்பிரகாஷ், பலராமன், ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story