திருச்சி மாவட்டத்தில் 7 லட்சத்து 95 ஆயிரம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு அமைச்சர் தகவல்


திருச்சி மாவட்டத்தில் 7 லட்சத்து 95 ஆயிரம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 7 Jan 2019 4:30 AM IST (Updated: 7 Jan 2019 2:24 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் 7 லட்சத்து 95 ஆயிரம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வினியோகிக்கப்படும் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்.

திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் ரேஷன் அட்டைதாரர் களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரூ. 1,000, விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் தொடக்க விழா மரக்கடையில் சிந்தாமணி குடோனில் நேற்று நடந்தது. விழாவுக்கு கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்கள், ரூ.1,000 ஆகியவற்றை பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தனர்.

அப்போது அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசியதாவது:-

அறுவடை திருநாளான பொங்கல் திருநாளில் உழவர்கள் அனைவரும் மனமகிழ்ச்சி பெரும் வகையில் குடும்ப அட்டையுள்ள அனைத்து குடும்பங்களுக்கும், முகாமில் தங்கி உள்ள இலங்கை தமிழர் குடும்பங்கள் உள்ளிட்டவர்களும் பயன்பெறும் வகையில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் 2 அடி நீள கரும்புத்துண்டு ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது.

திருச்சி மாவட்டத்தில் 7 லட்சத்து 95 ஆயிரத்து 82 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வினியோகிக்கப்படும். இதனை வருகிற 12-ந்தேதி வரை ரேஷன் கடைகளில் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம். அனைவருக்கும் விடுபடாமல் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக மண்டல மேலாளர் சிற்றரசு, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அதிகாரி கிறிஸ்டி, தாசில்தார் (கிழக்கு) சண்முகவேலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story