அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1¼ கோடி மோசடி தலைமை ஆசிரியர் உள்பட 5 பேர் மீது வழக்கு


அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1¼ கோடி மோசடி தலைமை ஆசிரியர் உள்பட 5 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 6 Jan 2019 10:15 PM GMT (Updated: 6 Jan 2019 8:57 PM GMT)

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ.1¼ கோடி மோசடி செய்த தலைமை ஆசிரியர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

திருச்சி,

திருச்சி மாவட்டம், முசிறி ஆமூர் வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரிடம், கடந்த 2014-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி தலைமைஆசிரியர் காளியப்பன் அறிமுகமானார். அவர் சண்முகசுந்தரத்திடம், “அரசு அதிகாரிகள் பலர் தனக்கு நல்ல பழக்கத்தில் இருப்பதால் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதுபவர்களுக்கு எளிதாக அரசு வேலை வாங்கி கொடுத்துவிட முடியும். அதற்கு பணம் செலவு செய்ய வேண்டும்” என்று கூறி உள்ளார்.

இதனை நம்பி சண்முகசுந்தரம் தனக்கு அரசு வேலை வாங்கி தரும்படி அவரிடம் கூறி உள்ளார். இவரைபோல திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 91 பேரும் தங்களுக்கு அரசு வேலை வாங்கி தரும்படி கூறி உள்ளனர். இதையடுத்து காளியப்பன் உள்பட 5 பேர் சேர்ந்து திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டலில் வைத்து சண்முகசுந்தரம் மற்றும் 91 பேரிடம் ரூ.1¼ கோடி வாங்கியதாக கூறப்படுகிறது.

பின்னர் பணம் கொடுத்தவர்களிடம் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவு அறிவித்ததும் அனைவருக்கும் வேலை கிடைத்துவிடும் என்று கூறி அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து சில நாட்களுக்கு பிறகு டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியானது. ஆனால், அந்த தேர்வு பட்டியலில் பணம் கொடுத்தவர் களின் பெயர் இடம் பெறவில்லை.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் காளியப்பனை அணுகி கேட்டபோது, அவர் மழுப்பலாக பதில் கூறி உள்ளார். இதுகுறித்து திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 2-ல் சண்முகசுந்தரம் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

அதன்பேரில் மாநகர குற்றப்பிரிவு போலீசார் கிருஷ்ணகிரியை சேர்ந்த தலைமை ஆசிரியர் காளியப்பன், லட்சுமணன், வேலூரை சேர்ந்த சிவகுமார், வெங்கடேசன், திருமால் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story