மாமனார், மாமியார் வீட்டுக்குள் விடாததால் குழந்தைகளுடன் மறியலில் ஈடுபட்ட இளம்பெண்


மாமனார், மாமியார் வீட்டுக்குள் விடாததால் குழந்தைகளுடன் மறியலில் ஈடுபட்ட இளம்பெண்
x
தினத்தந்தி 6 Jan 2019 10:30 PM GMT (Updated: 6 Jan 2019 9:17 PM GMT)

வேடசந்தூரில் மாமனார், மாமியார் வீட்டுக்குள் விடாததால் இளம்பெண் தனது குழந்தைகளுடன் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேடசந்தூர், 

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்த பூபதி என்பவரது மகள் ரூபினி(வயது 24). இவருக்கும் வேடசந்தூர் நேருஜி நகரை சேர்ந்த சின்ராஜ் என்பவரின் மகன் பாலச்சந்தர் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சமீதா(4) என்ற மகளும், லோகேஸ்வரன்(3) என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் பாலச்சந்தர் வெளிநாட்டில் வேலைக்கு சென்றார். ஆனால் ரூபினியை அவரது கணவர் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் வீட்டுக்குள்ளும் அனுமதிக்கவில்லை. எனவே ரூபினி பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். மேலும் இது குறித்து வேடசந்தூர் போலீசிலும், வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் வேடசந்தூர் வந்த அவர், குழந்தைகளுடன் கணவர் வீட்டுக்கு செல்ல முயன்றார். ஆனால் அவரை வீட்டுக்குள் மாமனார், மாமியார் விடவில்லை என்று கூறப் படுகிறது. இதையடுத்து நேற்று மாலை வேடசந்தூரில் வடமதுரை ரோட்டில் ரூபினி தனது 2 குழந்தைகளுடன் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதையொட்டி சம்பவ இடத்திற்கு வேடசந்தூர் போலீசார் விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ரூபினி மற்றும் அவரது குழந்தைகளை போலீஸ் நிலையத்திற்கு ஆட்டோவில் அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியதை தொடர்ந்து ரூபினி குழந்தைகளுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Next Story