நாகர்கோவிலில் குண்டும், குழியுமான சாலைகள் வாகன ஓட்டிகள் அவதி


நாகர்கோவிலில் குண்டும், குழியுமான சாலைகள் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 7 Jan 2019 4:15 AM IST (Updated: 7 Jan 2019 2:52 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் உள்ள குண்டும், குழியுமான சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தின் தலைநகராக நாகர்கோவில் திகழ்கிறது. கன்னியாகுமரிக்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் நாகர்கோவில் வழியாகவே செல்கிறார்கள். மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து கேரள மாநிலத்துக்கு செல்லும் வாகனங்களும் நாகர்கோவிலை தொட்டே செல்கின்றன. இப்படி இருக்க நாகர்கோவில் நகரிலோ சாலைகள் படுமோசமாக உள்ளது.

அதாவது பாலமோர் சாலை, கேப் சாலை மற்றும் கணேசபுரம், பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை, கிறிஸ்துநகர் பிரதான சாலை என அனைத்து சாலைகளுமே குண்டும்-குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக கட்டபொம்மன் சந்திப்பில் இருந்து ஒழுகினசேரி வரை செல்லும் அவ்வை சண்முகம் சாலை மிகவும் மோசமான நிலைக்கு சென்றுவிட்டது. அங்கு ஜல்லி, தார் கலவை அனைத்தும் பெயர்ந்து ரோடு இருப்பதே தெரியாத அளவுக்கு உள்ளது. மேலும் இது சாலையா? அல்லது மரண குழிகளா? என்று கேட்கும் அளவுக்கு பெரிய பள்ளங்களும் இந்த சாலையில் உள்ளது.

இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

இதே போல போலீஸ் சூப்பிரண்டு அலுவலக சாலையும் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத அளவுக்கு மாறிவிட்டது. நகரின் முக்கியமான சாலையாக கருதப்படும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக சாலைக்கே இந்த நிலையா? என்று பொதுமக்கள் பேசிக்கொள்கின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அனைவரும் இந்த சாலை வழியாகத்தான் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வருகிறார்கள். அதிலும் மழைக்காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி குளம் போல காட்சி அளிக்கிறது. அந்த சமயத்தில் சாலைகளில் செல்ல வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகிறார்கள். எனினும் இந்த சாலையை சீரமைப்பது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே போலீஸ் சூப்பிரண்டு அலுவலக சாலை மற்றும் அவ்வை சண்முகம் சாலை உள்பட நாகர்கோவிலில் குண்டும், குழியுமாக காணப்படும் அனைத்து சாலைகளையும் உடனே சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story