அகில இந்திய அளவில் வேலை நிறுத்தம்: கர்நாடகத்தில் நாளை முதல் 2 நாட்கள் பஸ்கள் ஓடாது
அகில இந்திய அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளதால், கர்நாடகத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) முதல் 2 நாட்கள் அரசு பஸ்கள் ஓடாது என்று கூறப்படுகிறது.
பெங்களூரு,
அகில இந்திய அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளதால், கர்நாடகத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) முதல் 2 நாட்கள் அரசு பஸ்கள் ஓடாது என்று கூறப்படுகிறது.
வேலையை புறக்கணிப்பார்கள்
மத்திய அரசு, மோட்டார் வாகன பாதுகாப்பு மசோதாவை இயற்றக்கூடாது என்பது உள்பட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி அந்த மசோதாவை கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி. ஆகிய அமைப்புகளின் தொழிலாளர் நல சங்கங்கள் சார்பில் நாளை(செவ்வாய்க்கிழமை), நாளை மறுநாள்(புதன்கிழமை) ஆகிய 2 நாட்கள் அகில இந்திய அளவில் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு கர்நாடக அரசு பஸ் போக்குவரத்து சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. அன்றைய தினம் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலையை புறக்கணிப்பார்கள் என்று கூறப்படு கிறது.
23 ஆயிரம் பஸ்கள்
இதன் காரணமாக 8, 9-ந் தேதி கர்நாடகத்தில் அரசு பஸ்கள் ஓடாது என்ற சொல்லப்படுகிறது. நாளை காலை 6 மணிக்கு தொடங்கும் இந்த வேலை நிறுத்தம் 9-ந் தேதி இரவு 9 மணி வரை நீடிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடகத்தில் சுமார் 23 ஆயிரம் அரசு பஸ்கள் ஓடுகின்றன. அந்த பஸ்கள் அனைத்தும் சேவையில் ஈடுபடாது என்று கூறப்படுகிறது. மேலும் பெங்களூருவில் ஆட்டோக்களும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்கின்றன.
பாதிப்பு இருக்காது
தனியார் வாடகை கார்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த போராட்டத்திற்கு வங்கி ஊழியர்கள் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஏ.பி.எம்.சி. மார்க்கெட் லாரி உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ரெயில்கள் என்றும்போல் ஒடும். அதில் எந்த பாதிப்பும் இருக்காது.
Related Tags :
Next Story