கம்பம் பகுதியில் இளவயது திருமணத்தை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா?
கம்பம் பகுதியில் இளவயது திருமணத்தை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
கம்பம்,
கம்பத்தில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஆடை உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. மேலும் இப்பகுதியில் பெரிய தொழிற்சாலைகள் இல்லை. இதனால் 60 சதவீதம் மக்கள் விவசாய தொழிலை சார்ந்துள்ளனர். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் வசதி பற்றாக்குறையின் காரணமாக தங்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில், அரசு உதவிபெறும் பள்ளிகளில் சேர்த்து விடுகின்றனர். பெற்றோர்கள் வெளியூரில் தங்கி பணிபுரிகின்றனர்.
தங்கள் குழந்தைகளை அரசு விடுதிகளில் சேர்த்து விடுகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு பெற்றோர்களின் அரவணைப்பு இல்லாமலும் முறையான அறிவுரை கிடைக்காமல் உள்ளது. இதன்காரணமாக அவர்கள் தவறான பாதையில் செல்ல நேரிடுகிறது. சிறுவயதில் காதல் வலையில் சிக்கி தங்களது வாழ்க்கையை சீரழித்து விடுகின்றனர். சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். மேலும் சமுதாயத்தில் நடக்கும் பாலியல் கொடுமைகளை கண்ட பெற்றோர்கள் வயதிற்கு வந்த பெண் குழந்தைகளை இளவயது திருமணம் செய்து வைக்க முயல்கின்றனர். இதனை தடுக்கும் விதமாக கம்பம் பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் விடுதிகளில் இளவயது திருமணத்தை தடுக்க மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்களிடம் கேட்டபோது, இளவயது திருமணத்தை தடுக்க பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதேபோல் பள்ளி சுவர்களில் இளவயது திருமணத்தால் உண்டாகும் விளைவுகள் குறித்து விளம்பரங்கள் செய்ய வேண்டும். பள்ளிகளில் ஆலோசனை கூட்டம் நடத்தி பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் பள்ளி, கல்லூரி வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பஸ்களில் 1098 என்ற ‘சைல்டுலைன்’ புகார் எண் குறித்து விழிப்புணர்வு வாசகங்களை எழுத வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story