தென்மேற்கு ரெயில்வேயில் பயணிகளின் பாதுகாப்புக்கு செல்போன் செயலி அறிமுகம்: 2 ஆண்டுகளில் விதிமீறியவர்களிடம் இருந்து ரூ.2.01 கோடி அபராதம் வசூல்


தென்மேற்கு ரெயில்வேயில் பயணிகளின் பாதுகாப்புக்கு செல்போன் செயலி அறிமுகம்: 2 ஆண்டுகளில் விதிமீறியவர்களிடம் இருந்து ரூ.2.01 கோடி அபராதம் வசூல்
x
தினத்தந்தி 7 Jan 2019 3:30 AM IST (Updated: 7 Jan 2019 3:14 AM IST)
t-max-icont-min-icon

தென்மேற்கு ரெயில்ேவ சார்பில் பயணிகளின் பாதுகாப்புக்கு செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

பெங்களூரு, 

தென்மேற்கு ரெயில்ேவ சார்பில் பயணிகளின் பாதுகாப்புக்கு செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் கடந்த 2 ஆண்டுகளில் விதிகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.2.01 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

தென்மேற்கு ரெயில்வே ஆலோசனை கூட்டம்

தென்மேற்கு ரெயில்வே சார்பில் பயணிகளின் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் உப்பள்ளியில் உள்ள தலைமை அலுவலகத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை டி.ஜி.பி. அருண் குமார் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் தென்மேற்கு மண்டல ரெயில்வேயில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

அப்போது, ரெயில்களில் அடிக்கடி போலீசார் சென்று சோதனையிட வேண்டும். பெண்களுக்கான பெட்டியில் ஆண்கள் பயணித்தால் உடனடியாக அவர்களை பிடித்து அருகே உள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். பாதுகாப்பு தொடர்பாக பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனடியாக செல்போன் மற்றும் டுவிட்டர் வழியாக புகார் அளிக்க பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று ரெயில்வே பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மண்டலத்தில் ரெயில்வே போலீசாரின் செயல்பாடுகள் குறித்த விவரங்கள் அடங்கிய செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

செல்போன் செயலி

கடத்தல், வழி தவறி வந்தவர்கள் என்று தென்மேற்கு ரெயில்வே போலீசார் சார்பில் மொத்தம் 1,859 குழந்தைகள் மீட்கப்பட்டனர். இவர்கள் தனியார் தொண்டு நிறுவனத்தின் வழியாக பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறார்கள்.

தென்மேற்கு ரெயில்வே சார்பில் ‘SWR security App’ எனும் செல்போன் செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த செயலியை பயணிகள் பதிவிறக்கம் செய்து கொள்வதன் மூலம் உடனடியாக, ரெயில்வே போலீசாரின் உதவியை அணுகலாம்.

அபராதம் வசூல்

இந்த காலக்கட்டத்தில் ரெயில் டிக்கெட்டில் முறைகேடுகளில் ஈடுபட்ட இடைத்தரகர்கள் 162 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதோடு, அவர்களிடம் இருந்து ரூ.11.62 லட்சம் மதிப்பிலான டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. ரெயில் நிலையங்களில் அனுமதியின்றி பொருட்கள் விற்பனை செய்த 18 ஆயிரத்து 739 பேரிடம் இருந்து ரூ.79.09 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. ரெயில் படிக்கட்டில் பயணித்த 6,336 பயணிகளிடம் இருந்து ரூ.12.44 லட்சம் அபராதம் வசூலானது.

ரெயில் மற்றும் ரெயில் நிலையங்களில் புகையிலை பொருட்கள் பயன்படுத்திய 8,536 பேரிடம் இருந்து ரூ.17.07 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. பெண்களுக்கான பெட்டியில் பயணம் செய்த ஆண்கள் மீது 1,387 வழக்குகள் பதிவாகின. இவர்களிடம் இருந்து ரூ.2.76 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

மொத்தம் ரூ.2.01 கோடி

மொத்தத்தில் கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை ரெயில்வே சட்டத்தில் உள்ள விதிகளை மீறியதாக 65 ஆயிரத்து 734 பேர் கைது செய்யப்பட்டதோடு, மொத்தம் ரூ.2.01 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இதில் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை ரூ.91.60 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த காலக்கட்டத்தில் பெங்களூரு மண்டலத்தில் மட்டும் ரூ.14.75 லட்சம் மதிப்பிலான 22.8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story