மும்பையில் இன்று முதல் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் போக்குவரத்து முடங்கும் அபாயம்
சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மும்பையில் இன்று முதல் பெஸ்ட் பஸ் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்.
மும்பை,
மும்பையில் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெஸ்ட் குழுமம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
பெஸ்ட் பஸ்
இந்த பஸ் சேவைகளை தினசரி சுமார் 30 லட்சம் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பெஸ்ட் பஸ்கள் நஷ்டத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பெஸ்ட் குழுமம் தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதிலும் திணறி வருகிறது.
மாத சம்பளத்திற்காக பெஸ்ட் ஊழியர்கள் போராட்டத்திற்கும் தள்ளப்பட்டு வருகிறார்கள்.
ஊழியர்கள் வேலை நிறுத்தம்
எனவே பெஸ்ட் குழுமத்தை மாநகராட்சியுடன் இணைத்து பட்ஜெட் தாக்கல் செய்யவேண்டும், குறிப்பிட்ட தேதியில் சம்பளத்தை ஊழியர்களுக்கு வழங்க வேண்டும், இன்னும் வழங்கப்படாமல் உள்ள கடந்த ஆண்டு தீபாவளி போனசை உடனடியாக வழங்க வேண்டும், சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பெஸ்ட் ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 7-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்.
பேச்சுவார்த்தை தோல்வி
இதைத்தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை அன்று பெஸ்ட் குழும பொதுமேலாளர் சுரேந்திரகுமார் பாக்டே பெஸ்ட் ஊழியர் யூனியன் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எதுவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. இதைத்தொடர்ந்து மேயர் விஸ்வநாத் மகாதேஷ்வர் பேச்சுவார்த்தை நடத்த இருந்தார். ஆனால் உடல் நலக்குறைவால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த பேச்சுவார்த்தை ரத்தானது.
இந்தநிலையில், அறிவித்தபடி பெஸ்ட் ஊழியர்கள் இன்று(திங்கட்கிழமை) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் குதிக்கிறார்கள். 30 ஆயிரம் ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கிறார்கள்.
இதன் காரணமாக இன்று மும்பை பெருநகரத்தில் பஸ் போக்குவரத்து அடியோடு முடங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. பெஸ்ட் பஸ்களை நம்பியிருக்கும் பயணிகள் அவதிக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story