விஸ்வரூப கோதண்டராமர் சிலைக்கு 100 அடி நீள மலர் மாலை - ஆதரவற்ற சிறுமிகளுடன் கலெக்டர் அணிவித்தார்


விஸ்வரூப கோதண்டராமர் சிலைக்கு 100 அடி நீள மலர் மாலை - ஆதரவற்ற சிறுமிகளுடன் கலெக்டர் அணிவித்தார்
x
தினத்தந்தி 7 Jan 2019 4:45 AM IST (Updated: 7 Jan 2019 4:14 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை வழியாக பெங்களூருவுக்கு 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் செல்லும் விஸ்வரூப கோதண்டராமர் சிலைக்கு ஆதரவற்ற சிறுமிகளுடன் கலெக்டர் கந்தசாமி, 100 அடி நீளமுள்ள மாலையை அணிவித்து வணங்கினார்.

திருவண்ணாமலை,

பெங்களூரு ஈஜிபுரத்தில் உள்ள கோதண்டராமர் கோவிலில் பிரமாண்ட விஸ்வரூப சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதற்காக வந்தவாசி அருகே உள்ள கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள மலையிலிருந்து 108 அடி உயரமும், 25 அடி அகலமும் கொண்ட விஸ்வரூப கோதண்டராமர் சிலை வடிவமைக்கப்பட்டது.

இந்த சிலை 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் ஏற்றப்பட்டு பெங்களூருவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த லாரி திருவண்ணாமலை மாவட்டம் கொரக்கோட்டை கிராமத்திலிருந்து புறப்பட்டு விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வழியாக சென்று மீண்டும் திருவண்ணாமலை மாவட்ட எல்லைக்குள் நுழைந்து சேத்துப்பட்டை அடைந்தது. அங்கிருந்து புறப்பட்ட லாரி மீண்டும் விழுப்புரம் மாவட்டத்துக்குள் நுழைந்து கடந்த 4-ந் தேதி திருவண்ணாமலை மாவட்ட எல்லையான வேடந்தவாடியை வந்தடைந்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் அங்கிருந்து லாரி புறப்பட்டு மங்கலம் வழியாக திருவண்ணாமலை நோக்கி வந்தது. அன்று மாலை சுமார் 5.30 மணியளவில் திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலை கூட்ரோடு அருகில் வந்தது. இதையடுத்து லாரி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டது.

இது குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மக்கள் அங்கு வந்து விஸ்வரூப கோதண்டராமர் சிலையை நேரில் பார்வையிட்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து நேற்று காலை முதல் அங்கு ஏராளமான பொதுமக்கள் சாமி சிலையை காண வந்தனர். அவர்கள் சிலை உள்ள லாரியின் அருகில் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 3 மணியளவில் கலெக்டர் கே.எஸ். கந்தசாமி தனது 2 மகன்களுடன் அங்கு வந்தார். அவர் அரசு ஆதரவற்ற பெண்கள் இல்லத்தை சேர்ந்த சிறுமிகளையும் அழைத்து வந்தார்.

முன்னதாக சாமி சிலை தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் 100 அடி நீள மலர் மாலை சாமி சிலைக்கு ஆதரவற்ற சிறுமிகளுடன் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி அணிவித்தார். தொடர்ந்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் நேற்று மாலை சாமி சிலை இருந்த லாரி அங்கிருந்து நகர்த்த திடீர் ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் அந்த முடிவு கைவிடப்பட்டது.

இன்று (திங்கட்கிழமை) காலை அங்கிருந்து லாரியை நகர்த்த உள்ளதாக சிலை பொறுப்பாளர்கள் தெரிவித்தனர். மேலும் இந்த லாரி அங்கிருந்து புறப்பட்டு திண்டிவனம் சாலை, பெரியார் சிலை, மத்தலாங்குளத் தெரு, போளூர் சாலை, அண்ணா நுழைவு வாயில், கிரிவலப்பாதை வழியாக செங்கம் சாலை செல்ல முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


Next Story