திருவாரூர் இடைத்தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தயார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
கோவை,
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசின் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி கோவை ஒண்டிப்புதூர் நகர கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கினார்.
விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு கோவை மாவட்டத்தில் உள்ள 10 லட்சத்து 4 ஆயிரத்து 532 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கி வைத்து பேசியதாவது:-
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை ஏழை, எளிய சாமானிய மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் 2 அடி நீள கரும்புத்துண்டு ஆகியவை அடங்கிய பொருட்களுடன் ரூ.1000 அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் மட்டும் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்க ரூ.107 கோடியே 48 லட்சத்து 34 ஆயிரத்து 210 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதே போல விலையில்லா வேட்டி-சேலைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 5 லட்சத்து 51 ஆயிரத்து 699 ஆண்களுக்கு வேட்டிகளும், 5 லட்சத்து 38 ஆயிரத்து 485 பெண்களுக்கு சேலைகளும் வழங்கப்படுகிறது.
கடந்த 50 ஆண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு கோவை மாவட்டத்தில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் உயர் மட்ட பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. பில்லூர் 3-வது குடிநீர் திட்டத்தை செயல்படுத்தப்படுவதன் மூலம் கோவையில் தடையில்லா குடிநீர் சேவை இன்னும் 50 ஆண்டுகள் வரை வழங்க இயலும்.
கோவை எஸ்.ஐ.எச்.எஸ். காலனி பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான ரெயில்வே மேம்பால பணிகளில் உள்ள தடைகள் நீக்கப்பட்டு விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கப்படும். அரசு செயல் படுத்தும் திட்டங்களை மக்கள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழா முடிந்து வெளியே வந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறுகையில், ‘திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும். தேர்தலுக்கு அ.தி.மு.க. தயாராகவே உள்ளது. பொங்கல் பரிசு வழங்குவதை கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.’ என்றார்.
விழாவில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன், எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுனன், வி.சி.ஆறுகுட்டி, மாவட்ட வருவாய் அதிகாரி துரை ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பழனிசாமி, முன்னாள் எம்.பி. தியாகராஜன், ஆவின் தலைவர் கே.பி.ராஜு, சிந்தாமணி கூட்டுறவு சங்க தலைவர் சிங்கைமுத்து, நா.கருப்பசாமி, முன்னாள் கவுன்சிலர்கள் சிங்கைபாலன், முத்துசாமி, சால்ட் வெள்ளிங்கிரி, சொக்கம்புதூர் செந்தில் மற்றும் வெள்ளலூர் பால கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் கோவை ராமநாதபுரம், சுகுணாபுரம், குனியமுத்தூர், சுண்ணாம்புகாளவாய் உள்பட கோவை நகரின் பல்வேறு இடங்களில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
Related Tags :
Next Story