புவனகிரி அருகே ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி
புவனகிரி அருகே நண்பர்களுடன் குளித்த சிறுவன், ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
புவனகிரி,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த புவனகிரி அருகே உள்ள அக்கியகுடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் லோகேஷ் (வயது 6). இவன் நேற்று முன்தினம், நண்பர்களுடன் குளிப்பதற்காக அதேஊரில் உள்ள வெள்ளாற்றுக்கு சென்றான்.
பின்னர் லோகேஷ் உள்பட அனைவரும் ஆற்றுக்குள் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து அனைவரும் வெளியே வந்து விட்டனர். ஆனால் லோகேஷ் மட்டும் ஆற்றுக்குள் இருந்து வெளியே வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவனுடன் சென்ற சிறுவர்கள் இது குறித்து அவனது பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர். இதனால் பதறிய பெற்றோர் மற்றும் உறவினர்கள் வெள்ளாற்றுக்கு விரைந்து வந்து தண்ணீருக்குள் இறங்கி லோகேசை தேடினர். இருப்பினும் அவன் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் நேற்று காலை வெள்ளாற்றில் லோகேஷ் பிணமாக மிதந்தான். இதைபார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுபற்றி அவனது பெற்றோருக்கும், புவனகிரி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஆற்றில் பிணமாக மிதந்த லோகேசின் உடலை கைப்பற்றி, அவனுடன் குளித்த சிறுவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் நண்பர்களுடன் குளிக்க வந்த லோகேஷ் தண்ணீரில் மூழ்கி பலியானது தெரியவந்தது. இதனிடையே அங்கு வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் லோகேசின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதையடுத்து லோகேசின் உடல் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் புவனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நண்பர்களுடன் குளித்த சிறுவன் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story