புதையல் எடுத்து தருவதாக கூறி பண மோசடி செய்த நாட்டு வைத்தியர் கைது
ராசிபுரம் அருகே புதையல் எடுத்து தருவதாக கூறி பண மோசடி செய்த நாட்டு வைத்தியர் போலீசார் கைது செய்தனர்.
ராசிபுரம்,
ராசிபுரம் அருகே உள்ள சந்திரசேகரபுரம் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 53). விவசாயி. இவருக்கு மூட்டு வலி இருந்து வந்தது. இதற்காக டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்கவில்லை. இதையொட்டி சேந்தமங்கலம் அருகிலுள்ள நடுக்கோம்பை பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (43) என்பவர் மலைவேப்பங்குட்டையில் நாட்டு வைத்தியம் செய்து வந்ததை கேள்விப்பட்டு அவரிடம் சிகிச்சைக்காக சென்றார். இதனால் சுப்பிரமணிக்கும், ராமசாமிக்கும் இடையே நல்ல பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் வைத்தியசாலையின் அருகிலுள்ள கோவிலில் சுப்பிரமணி சாமி ஆடியபடி, ராமசாமியின் நிலத்தில் புதையல் இருப்பதாகவும், அதை எடுக்க தவணைகளில் ரூ.10 லட்சம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. அதன்படி ராமசாமியின் வீட்டுக்கு வந்த சுப்பிரமணி பூஜைகள் செய்து, ராமசாமியின் நிலத்தில் இருந்து உலோகத்தால் ஆன 1 1/2 அடி உயரம் உள்ள நடராஜர் சிலையை எடுத்துள்ளார். மேலும் இந்த சிலைக்கு அடியில் தோண்டினால் கண்டிப்பாக புதையல் கிடைக்கும் என்றும் அதற்கு தற்போது நேரம் கூடிவரவில்லை என்றும் கூறி அந்த சாமி சிலைக்கு பூஜை செய்து பிறகு அங்கேயே புதைத்துள்ளார். ஆனால் சொன்னபடி புதையலை எடுத்து தராததால் சந்தேகம் அடைந்த ராமசாமி சிலை புதைத்து வைக்கப்பட்ட இடத்தை தோண்டி பார்த்தபோது சிலை அங்கு இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், புதையல் எடுத்து தருவதாக கூறி பணத்தை பெற்றுக்கொண்டு சுப்பிரமணி மோசடி செய்ததாக ராசிபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்தனர். அவரிடம் இருந்து நடராஜர் சிலையும் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story