தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி வனக்காவலர் பலி


தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி வனக்காவலர் பலி
x
தினத்தந்தி 7 Jan 2019 5:33 AM IST (Updated: 7 Jan 2019 5:33 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி வனக்காவலர் பலியானார்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தாவரக்கரை கிராமத்தையொட்டி உள்ள வனப்பகுதியில் 7 காட்டு யானைகள் முகாமிட்டு இருந்தன. இதுகுறித்து கிராமமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வன ஊழியர்கள், பொதுமக்கள் உதவியுடன் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் நேற்று மாலை கிராமத்தையொட்டி வனப்பகுதியில் முகாமிட்டு இருந்த 7 யானைகளில் ஒரு யானை ஆக்ரோஷமாக திரும்பி வன ஊழியர்களை விரட்டியது. இதில் கோட்டத்தி கிராமத்தை சேர்ந்த வனக்காவலர் மாரப்பா (வயது 55) என்பவர் ஓடும் போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவரை அந்த யானை துதிக்கையால் தூக்கி வீசியது.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை மற்ற வன ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாரப்பா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து மாரப்பாவின் உடலை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

யானை தாக்கி வனக்காவலர் இறந்தது குறித்து வன ஊழியர்கள் வன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி மற்றும் வனத்துறை அலுவலர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். யானை தாக்கி வனக்காவலர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story