ஆவரங்காட்டில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு - அமைச்சர் தங்கமணி வழங்கினார்
ஆவரங்காட்டில் ரேஷன்கார்டு தாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை அமைச்சர் தங்கமணி வழங்கினார்.
பள்ளிபாளையம்,
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகில் உள்ள ஆவரங்காடு ரேஷன்கடை அருகில் ரேஷன்கார்டுதாரர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகுமார சின்னையன் முன்னிலை வகித்தார். மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளர் பாலமுருகன் வரவேற்று பேசினார்.
தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் மற்றும் ரூ.ஆயிரம் வழங்கினர்.
அப்போது அமைச்சர் தங்கமணி பேசியதாவது:- நாமக்கல் மாவட்டத்தில் 5 லட்சத்து 24 ஆயிரத்து 872 ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த பொங்கல் பரிசை ஆண்டுதோறும் சிறப்பாக அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த ஆண்டு ரூ.ஆயிரத்தை ஏழைமக்கள் பயன்பெறும் வகையில் அளித்துள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் பர்கத், மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் செந்தில், முன்னாள் நகராட்சி தலைவர் வெள்ளியங்கிரி, துணைத்தலைவர் சுப்பிரமணியம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள், பள்ளிபாளையம் முன்னாள் கவுன்சிலர்கள் ஜெய்கணேஷ், ஜெயாவைத்தி, மாதேஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நகராட்சி சார்பில் ஆவரங்காடு, புதன்சந்தை, ஜீவாசெட் ஆகிய 3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் விற்பனை நிலையத்தின் பூமிபூஜை நிகழ்ச்சிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
Related Tags :
Next Story