ஓசூர் அருகே குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு - அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி வழங்கினார்


ஓசூர் அருகே குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு - அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி வழங்கினார்
x
தினத்தந்தி 7 Jan 2019 5:33 AM IST (Updated: 7 Jan 2019 5:33 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் அருகே குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி நேற்று வழங்கினார்.

ஓசூர்,

ஓசூர் தாலுகா தொரப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்குட்பட்ட குமுதேபள்ளி ரேஷன் கடையில், 1013 குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் 2019-ம் ஆண்டிற்கான பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரூ,1,000 வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு, கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். ஓசூர் உதவி கலெக்டர் விமல்ராஜ் முன்னிலை வகித்தார்.விழாவில் தமிழக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரூ.1000 ஆகியவற்றை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழக மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகை செய்யும் வகையில், பொது வினியோக திட்டத்தின் கீழ், பொங்கல் பண்டிகைக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் பொங்கல் பை அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பை வழங்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இந்தாண்டு பொங்கல் விழாவை கொண்டாட ரூ,1,000 அரசால் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொங்கல் வாழ்த்துக்களுடன் அறிவிப்பு செய்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மூலம் நடத்தப்பட்டு வரும் 1,058 ரேஷன் கடைகள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தால் நடத்தப்பட்டு வரும் 36 ரேஷன் கடைகள், ஆக மொத்தம் 1,094 ரேஷன் கடைகளில் 4 லட்சத்து 89 ஆயிரத்து 350 குடும்ப அட்டைதாரர்கள் இதன் மூலம் பயன் அடைவார்கள்.

இதற்காக 4 லட்சத்து 89 ஆயிரத்து 350 கிலோ பச்சரிசி, சர்க்கரை, 2 அடி நீள கரும்பு துண்டு, 9 ஆயிரத்து 787 கிலோ உலர் திராட்சை, 9 ஆயிரத்து 787 கிலோ முந்திரி மற்றும் 2 ஆயிரத்து 447 கிலோ ஏலக்காய் ஒதுக்கீடு செய்யப்பட்டு வரப்பெற்றுள்ளது. மேலும் ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.1,000 வீதம் 4,89,350 குடும்ப அட்டைகளுக்கு ரூ.48 கோடியே 93 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பொங்கல் பண்டிகை தொடங்குவதற்கு முன், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். இதற்கென, ரூ.51.13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி பேசினார்.

இதில், கூட்டுறவு சங்க இணை பதிவாளர் பிரபாகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர், துணை பதிவாளர் ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்க தலைவர் ஜெயராம், மாவட்ட அ.தி.மு.க. பொருளாளர் கே.நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story