8 வழி பசுமை சாலை அமைக்க எதிர்ப்பு: அதிகாரப்பட்டியில் விவசாயிகள் உண்ணாவிரதம்
8 வழி பசுமை சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரப்பட்டியில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொம்மிடி,
சேலம்-சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் 8 வழி பசுமை சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த சாலை சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் உள்பட 5 மாவட்டங்கள் வழியாக அமைகிறது. தர்மபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில் 53 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த சாலை அமைக்க நில அளவீடு செய்யப்பட்டு முட்டுக்கல் நடப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த விவசாயிகள் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் ஆட்சேபனை மனுக்கள் அளித்தனர். இதன் மீதான விசாரணை அரூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட விவசாயிகள் 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு நிலம் தர மறுப்பு தெரிவித்தனர்.
இந்தநிலையில் 8 வழி பசுமை சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், இந்த திட்டத்தை கைவிடக்கோரியும் நேற்று பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அதிகாரப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் விவசாயிகள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரதத்திற்கு இயக்க தலைவர் சந்திரகுமார் தலைமை தாங்கினார். இதில் திட்ட சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் 8 வழி பசுமை சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது 8 வழி பசுமை சாலையால் விவசாய நிலம் மற்றும் மா, தென்னை உள்ளிட்ட மரங்கள் பாதிக்கப்படுவதாகவும், இந்த திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
Related Tags :
Next Story