ஆரல்வாய்மொழியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்; பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்ததால் பரபரப்பு


ஆரல்வாய்மொழியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்; பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 8 Jan 2019 4:30 AM IST (Updated: 7 Jan 2019 9:13 PM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழி அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றியபோது பொக்லைன் எந்திரம் சிறைபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆரல்வாய்மொழி,


ஆரல்வாய்மொழி அருகே தேவசகாயம் மவுண்ட் தெற்குமலை ஓடை பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து 4 வீடுகள் கட்டப்பட்டு இருந்தது. இந்த வீடுகளை இடிக்கும் படி தனியார் ஒரு தொடர்ந்த வழக்கில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

இந்த உத்தரவு பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியும் அவர்கள் வீட்டை காலி செய்யவில்லை. அதனால், அதிகாரிகள் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.


இந்தநிலையில் மனுதாரர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாகர்கோவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதையடுத்து கடந்த மாதம்(டிசம்பர்) 14–ந்தேதி பொக்லைன் எந்திரத்துடன் 4 வீடுகளையும் அகற்ற அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அப்போது, ஆக்கிரமிப்பு வீட்டின் மற்றும் அப்பகுதி பொதுமக்களும் எதிர்ப்பு தெரித்தனர். அதைதொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் ஒரு வாரம் காலஅவகாசம் கொடுத்து சென்றனர். அதன்பிறகும் அவர்கள் வீட்டை காலி செய்யவில்லை.

இந்தநிலையில் நேற்று காலை 10 மணிக்கு பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் வசந்தி, உதவி பொறியாளர் வின்சென்ட் லாரன்ஸ் மற்றும் வருவாய் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர். மேலும், இன்ஸ்பெக்டர்கள் ஜெயலெட்சுமி(ஆரல்வாய்மொழி), சிவசங்கரன்(பூதப்பாண்டி) தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அதிகாரிகளின் உத்தரவின் 3 வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.


இறுதியாக 4–வது வீட்டில் ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இருந்தார். அவர் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தார். இதனால், அதிகாரிகள் செய்வதறியாது திகைத்தனர். பின்னர் அதிகாரிகள், ஆதரவற்ற மாற்றுத்திறனாளியை அரசு காப்பகத்தில் சேர்த்து விட்டு, அதன்பிறகு வீட்டை அகற்ற முடிவு செய்தனர்.

அதைதொடர்ந்து பொக்லைன் எந்திரத்தை அனுப்ப முயன்றனர். அப்போது, அகற்றப்பட்ட 3 வீடுகளை சேர்ந்த பெண்களும் பொக்லைன் எந்திரத்தின் முன்பு திரண்டு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அந்த பெண்கள், மாற்றுத்திறனாளியின் வீட்டையும் இடிக்க வேண்டும் என்று பொக்லைன் எந்திரத்தின் முன் படுத்து சிறைபிடித்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதன்பிறகு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story