திருவள்ளூர் பகுதிகளில் உணவு பொருட்களை கலப்படம் செய்து விற்றால் கடும் நடவடிக்கை உணவு பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை


திருவள்ளூர் பகுதிகளில் உணவு பொருட்களை கலப்படம் செய்து விற்றால் கடும் நடவடிக்கை உணவு பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை
x
தினத்தந்தி 8 Jan 2019 4:00 AM IST (Updated: 7 Jan 2019 9:28 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் கலப்பட உணவு பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் நேற்று உணவு பாதுகாப்புதுறை சார்பில் பொதுமக்கள் பயன்படுத்தும் உணவு பொருட்களில் கலப்படம் குறித்து சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் கவிக்குமார் தலைமை தாங்கினார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொதுமக்கள் அன்றாடம் வீடுகளில் பயன்படுத்தும் டீத்தூள், பச்சைபட்டாணி, பருப்பு வகைகள், பால் ,உப்பு, வெல்லம், தேன், நெய், மிளகு, எண்ணெய், மிளகாய்தூள் போன்ற உணவு பொருட்களில் கலப்படம் செய்யப்பட்டால் கண்டறிவது பற்றி செயல்முறை விளக்கம் அளித்தனர். பின்னர் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருட்களை காட்சிக்கு வைத்து அவற்றை செயல்முறை விளக்கத்துடனும் செய்து காண்பித்தனர்.

அதன் பின்னர், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் கவிக்குமார் கூறியதாவது;-

பொதுமக்கள் வாங்கும் பொருட்களில் கவனம் செலுத்த வேண்டும். அந்த பொருளின் காலாவதி தேதி போன்றவற்றை பார்த்து வாங்க வேண்டும். உணவு பொருட்களில் கலப்படம் இருப்பது தெரியவந்தால் உடனடியாக உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

அவ்வாறு தகவல் தெரிவிக்கப்பட்டால் கலப்படம் செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்து கடையின் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story