ஆழ்துளை கிணறு அமைத்து தரக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை


ஆழ்துளை கிணறு அமைத்து தரக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 7 Jan 2019 10:45 PM GMT (Updated: 7 Jan 2019 4:59 PM GMT)

சிற்றம்பாக்கம், தென்காரணை கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறையை போக்க ஆழ்துளை கிணறு அமைத்து தரக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் சிற்றம்பாக்கம் கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இதன் அருகில் உள்ள கிராமம் தென்காரணை காலனி. இந்த 2 கிராமங்களுக்கும் தனித்தனியாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளன.

இவற்றில் இருந்து வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிற்றம்பாக்கம் கிராமத்தில் உள்ள போர்வெல்லில் இருந்து தென்காரணை பகுதிக்கும் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஒரே இடத்தில் இருந்து இரண்டு பகுதிகளுக்கு போர்வெல் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதால் தென்காரணை பகுதிக்கு போதுமான அளவு தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் தென்காரணை பகுதியை சேர்ந்த மக்கள் சீரான குடிநீர் வினியோகம் இல்லாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் சிற்றம்பாக்கம் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறு பழுது ஏற்பட்டது. அதனை சீர்செய்து புதிய ஆழ்துளை அமைத்து குடிநீர் பற்றாக்குறையை போக்க புதிய ஆழ்துளை கிணறு அமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரி வருகின்றனர். ஆனால் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து, சிற்றம்பாக்கம் மற்றும் தென்காரணை கிராமங்களைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் புரட்சி பாரதம் கட்சி மாநில விவசாயி அணி தலைவர் ஜெய்சுந்தர் தலைமையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அப்போது அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆழ்துளை கிணறு அமைத்து தரக்கோரியும், தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் அளித்தனர். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story