தியாகதுருகம் அருகே பழக்கடை ஊழியரை மிரட்டி ரூ.3¾ லட்சம் பறிப்பு


தியாகதுருகம் அருகே பழக்கடை ஊழியரை மிரட்டி ரூ.3¾ லட்சம் பறிப்பு
x
தினத்தந்தி 8 Jan 2019 4:00 AM IST (Updated: 7 Jan 2019 10:55 PM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் அருகே பழக்கடை ஊழியரை மிரட்டி ரூ.3¾ லட்சத்தை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கண்டாச்சிமங்கலம்,

கள்ளக்குறிச்சி அருகே உள்ள மோ.வன்னஞ்சூரை சேர்ந்தவர் பெரியசாமி மகன் சிதம்பரம் (வயது 32). இவர் கள்ளக்குறிச்சி கடைவீதியில் உள்ள ஒரு பழக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடனுக்கு பழங்கள் வாங்கியவர்களிடம் இருந்து பணம் வசூலிப்பதற்காக சிதம்பரம், நேற்று முன்தினம் காலை உளுந்தூர்பேட்டை, எலவனாசூர்கோட்டை, தியாகதுருகம் ஆகிய பகுதிகளுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அங்கு அவர் கடன் வாங்கியவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.3 லட்சத்து 85 ஆயிரத்தை வசூலித்தார். பின்னர் அவர் அந்த பணத்தை ஒரு பையில் வைத்துக் கொண்டு மீண்டும் கள்ளக்குறிச்சி நோக்கி புறப்பட்டார். இரவு 11 மணி அளவில் தியாகதுருகம் அருகே புறவழிச்சாலையில் சென்ற போது, ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்மநபர்கள் சிதம்பரத்தை பின் தொடர்ந்து வந்தனர்.

பின்னர் அவர்கள் 3 பேரும் சிதம்பரத்தை வழிமறித்து, அவரது மோட்டார் சைக்கிளில் இருந்த சாவியை எடுத்தனர். இதையடுத்து அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி சிதம்பரம் வைத்திருந்த ரூ.3 லட்சத்து 85 ஆயிரத்தை பறித்துக் கொண்டு, தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளிலேயே அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதனால் பதறிய சிதம்பரம், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன், தியாகதுருகம் இன்ஸ்பெக்டர் மூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சிதம்பரத்திடம் விசாரித்தனர்.

மேலும் சிதம்பரத்திடம் பணத்தை பறித்துச்சென்ற மர்மநபர்கள் உருவம் அந்த பகுதியில் உள்ள ஏதேனும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளதா? என்றும் சோதனை நடத்தி வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார், மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஊழியரை மிரட்டி மர்மநபர்கள் பணத்தை பறித்துச்சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story