ஊட்டியில் எச்.பி.எப். பள்ளியின் கதவை உடைத்து பொருட்களை சேதப்படுத்திய மர்ம ஆசாமிகள்


ஊட்டியில் எச்.பி.எப். பள்ளியின் கதவை உடைத்து பொருட்களை சேதப்படுத்திய மர்ம ஆசாமிகள்
x
தினத்தந்தி 7 Jan 2019 10:45 PM GMT (Updated: 2019-01-07T23:29:04+05:30)

ஊட்டியில் உள்ள எச்.பி.எப். பள்ளியின் கதவை உடைத்து மர்ம ஆசாமிகள் பொருட்களை சேதப்படுத்தினர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊட்டி,

மத்திய அரசின் இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ்(எச்.பி.எப்.) கனரக தொழிற்சாலை ஊட்டியில் இயங்கி வந்தது. இந்த தொழிற்சாலை நலிவடைந்த காரணத்தால் கடந்த ஆண்டு மூடப்பட்டது. இந்த வளாகத்தில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. மேலும் வளாகத்தில் எச்.பி.எப். ஆரம்பப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகின்றன. இப்பள்ளியில் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், பள்ளியை மூடும் நிலை உருவானது.

அதனை தொடர்ந்து முன்னாள் மாணவ-மாணவிகள், தற்போதைய ஆசிரியர்கள் முயற்சி எடுத்து மாணவ-மாணவிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினர். பள்ளி மாணவ-மாணவிகளின் நலனுக்காக ஒரு கமிட்டி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த கமிட்டிக்கு தலைவர், உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மாணவ-மாணவிகளுக்கு பஸ் வசதி போன்றவற்றை ஏற்படுத்த கமிட்டி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்து மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் வீடு திரும்பினர். இந்த நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கு பிறகு நேற்று காலை வழக்கம்போல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தனர். அப்போது தலைமை ஆசிரியர் அறையின் கதவு உடைக்கப்பட்டு கீழே கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் ஆசிரியர்கள் அறையில் உள்ள பீரோக்கள் திறந்த நிலையில், உள்ளே இருந்த பொருட்கள் கீழே சிதறி கிடந்தன. கணினி, மேஜை, கண்ணாடி கதவுகள் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்ததோடு, டியூப் லைட் உடைக்கப்பட்டு கிடந்தது. சில வகுப்பறைகளின் பூட்டு உடைக்கப்பட்டு, பொருட்கள் சேதப்படுத்தப்பட்டு இருந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி ஊரக போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கு, ஊட்டி நகர மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவாகி இருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

எச்.பி.எப். ஆரம்பப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியை மேம்படுத்துவதற்காக பலர் உதவிகளை செய்து வருகின்றனர். இதற்கிடையே மர்ம ஆசாமிகள் பள்ளிக்குள் நுழைந்து கதவு, ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். ஆனால் பொருட்கள் எதுவும் திருட்டு போகவில்லை. இதுகுறித்து ஊட்டி நகர மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story