கோவையில் இளம்பெண்ணுக்கு ‘வாட்ஸ்-அப்’பில் ஆபாச வீடியோ அனுப்பிய தொழில் அதிபர் கைது
கோவையில் இளம்பெண்ணுக்கு ‘வாட்ஸ்-அப்’பில் ஆபாச வீடியோ அனுப்பிய தொழில் அதிபர் கைது செய்யப்பட்டார்.
சரவணம்பட்டி,
கோவை சரவணம்பட்டி எல்.ஜி.பி. நகர் பகுதியை சேர்ந்தவர் மோசஸ் (வயது 37). என்ஜினீயரிங் படித்துள்ள இவர் கணபதி அத்திப்பாளையம் பிரிவில் ஒரு தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கணினி ஆபரேட்டராக பணியில் சேர்ந்தார்.
இந்த நிலையில் மோசஸ் அந்த பெண்ணின் செல்போனுக்கு ‘வாட்ஸ்-அப்’பில் ஆபாச வீடியோ மற்றும் குறுஞ்செய்திகளை தொடர்ந்து அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் இதுகுறித்து மோசஸிடம் கேட்டுள்ளார். இனி ஆபாச வீடியோக்களை அனுப்ப வேண்டாம் என்றும் அவரை கண்டித்துள்ளார்.
ஆனால் மோசஸ் அந்த பெண்ணுக்கு தொடர்ந்து ஆபாச வீடியோக்களை அனுப்பியதாக தெரிகிறது. மேலும் பணம் தருவதாக கூறி தனது ஆசைக்கு இணங்குமாறு தொந்தரவு செய்து உள்ளார். ஒரு கட்டத்தில், தனக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதை தொடர்ந்து அந்த இளம்பெண் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இளம்பெண்ணின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் மோசஸ் அனுப்பிய ஆபாச வீடியோக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் இருந்தது தெரியவந்தது. இதனால் போலீசார் தொழில் அதிபர் மோசஸ் மீது ஆபாச வார்த்தைகளில் பேசுதல், ஆபாச வீடியோ அனுப்புதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story