கோவை அருகே ‘சீல்’ வைத்த குடோனில் இருந்து புகையிலை பொருட்கள் திருட்டு


கோவை அருகே ‘சீல்’ வைத்த குடோனில் இருந்து புகையிலை பொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 8 Jan 2019 4:00 AM IST (Updated: 8 Jan 2019 12:31 AM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே ‘சீல்’ வைத்த குடோனில் இருந்து புகையிலை பொருட்கள் திருடு போனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை, 

கோவை அருகே செல்வபுரம் பகுதியில் உள்ள ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து இருப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. அதன்பேரில் கடந்த நவம்பர் 19-ந் தேதி உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமையில் அதிகாரிகள் குடோனில் சோதனை நடத்தினர். அங்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர். பின்னர் பறிமுதல் செய்த குட்கா பாக்கெட்டுகளை அங்கேயே வைத்து விட்டு குடோனுக்கு ‘சீல்’ வைத்தனர்.

குடோன் உரிமையாளரிடம் நடத்திய விசாரணையில் கோவிந்த் என்பவர் மளிகை பொருட்களை வைப்பதற்காக குடோனை வாடகைக்கு எடுத்திருந்ததாக கூறினார். இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் இந்த குடோனின் பின்புற கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக உணவு பாதுகாப்புதுறையினருக்கு 2 நாட்களுக்கு முன்பு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் குடோனில் ஆய்வு நடத்தினர். அப்போது குடோனில் இருந்த தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு ரூ.40 ஆயிரம் ஆகும்.

அதிகாரிகள் ‘சீல்’ வைத்த குடோனை உடைத்து குட்கா பாக்கெட்டுகளை திருடியது யார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி பாலசுப்பிரமணி செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story