வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடையில் பயங்கர தீ ரூ.50 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்


வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடையில் பயங்கர தீ ரூ.50 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்
x
தினத்தந்தி 7 Jan 2019 10:15 PM GMT (Updated: 7 Jan 2019 8:16 PM GMT)

திசையன்விளையில் வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடையில் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தது. இதில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் தீ வைத்தனரா? என போலீசார் விசாரிக்கின்றனர்.

திசையன்விளை,

நெல்லை மாவட்டம் திசையன்விளை சீனி செட்டி தெருவை சேர்ந்தவர் வடிவேல்நாடார். இவரது மகன் செந்தில்குமார் (வயது 38). திசையன்விளை இந்திரா மார்க்கெட்டில் இவர் வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை 3 மணிக்கு இவர் அய்யப்பன் கோவிலுக்கு புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில் அதிகாலை 4 மணி அளவில் அவரது கடையில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. சிறிது நேரத்தில் கடை முழுவதும் தீ பரவியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் திசையன்விளை, நாங்குநேரி தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இருந்தபோதும், கடையில் இருந்த வாகன உதிரி பாகங்கள், பேட்டரிகள், டயர்கள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன. இதன் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், வாகன உதிரி பாகங்கள் கடையில் தீப்பிடித்ததற்கு மின்கசிவு காரணம் இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த கடைக்கு அருகே 3 கடைகளில் மேற்கூரைகளை பிரித்து மர்மநபர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். அதன்பிறகு வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடையிலும் கொள்ளையடிக்க முயன்ற அவர்கள், தீ வைத்தனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடையில் பொருட்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

Next Story