அரியலூர் மாவட்டங்களில் இருசக்கர வாகன மானியம் பெற விண்ணப்பங்கள் வினியோகம்


அரியலூர் மாவட்டங்களில் இருசக்கர வாகன மானியம் பெற விண்ணப்பங்கள் வினியோகம்
x
தினத்தந்தி 7 Jan 2019 11:00 PM GMT (Updated: 7 Jan 2019 8:30 PM GMT)

அரியலூர் மாவட்டங்களில் பணி புரியும் மகளிர்களுக்கு இருசக்கர வாகன மானியம் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் இன்று (செவ்வாய்க் கிழமை) முதல் வினியோகம் செய்யப்படுகிறது.

அரியலூர்,

பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பணிபுரியும் மகளிருக்கு தமிழக அரசின் இரு சக்கர வாகன மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இன்று (செவ்வாய்க் கிழமை) வினியோகிக்கப்பட உள்ளன. இந்த திட்டத்தின் கீழ் ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தின் மொத்த தொகையில் 50 சதவீத தொகை ஆகியவற்றில் எது குறைவோ அத்தொகையை அரசு மானியமாக வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்சமாக ரூ.31 ஆயிரத்து 250 வழங்கப்படும். 125 சி.சி.-க்கு குறைவான கியர்லெஸ் வாகனத்தை பயனாளிகள் தங்களது சொந்த நிதியில் இருந்தோ, வங்கி கடன் அல்லது கடன் வழங்கும் நிறுவனங்களிடமிருந்தோ கடன் பெற்று வாங்கலாம்.

மானியம் பயனாளியின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். பயனாளிகள் 18 முதல் 40 வயது உள்ளவராகவும் விண்ணப்பிக்கும் போது இரு சக்கர வாகன ஓட்டுனர், பழகுனர் உரிமம் பெற்றவராக இருக்க வேண்டும். பயனாளியின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மானியத்தொகை போக இருசக்கர வாகனத்தின் மீதித்தொகை செலுத்த விருப்பம் உள்ளவர்கள் மட்டும் இத்திட்டத்தில் பயன் பெறலாம்.

மேலும், அமைப்புசார் மற்றும் அமைப்புச்சாரா நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள், கடைகள் மற்றும் நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்கள், சுயமாக சிறு தொழில் செய்யும் பெண்கள், அரசு சுய நிதி உதவி பெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு திட்டங்கள், சமூக அடிப்படை நிறுவனங்கள், ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், மகளிர் கற்றல் மையம் ஆகிய நிறுவனங்களில் தொகுப்பூதியம், தினக்கூலி அல்லது ஒப்பந்த ஊதிய அடிப்படையில் பணிபுரிந்து வரும் மகளிர்கள் வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆஷா பணியாளர்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

மேலும், பயனாளிகள் 8-ம் வகுப்பு (தேர்ச்சி, தோல்வி) படித்திருக்க வேண்டும். ஏற்கனவே 2017-18-ம் ஆண்டிற்கு விண்ணப்பித்து மானியம் கிடைக்கப்பெறாதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. பெரம்பலூர் மாவட்ட பெண்களுக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகத்திலும், அரியலூர் மாவட்ட பெண்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் அளிக்கப்படும். விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வருகிற 18-ந் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களுக்கு எந்த கட்டணமும் இல்லை. அவற்றை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர்கள் சாந்தா (பெரம்பலூர்), விஜயலட்சுமி (அரியலூர்) ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர். 

Next Story