தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு அ.ம.மு.க. - விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு அ.ம.மு.க. - விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Jan 2019 4:15 AM IST (Updated: 8 Jan 2019 2:07 AM IST)
t-max-icont-min-icon

மேகமலை, தும்மக்குண்டு ஊராட்சிகளுக்கு உட்பட்ட மலைக்கிராமங்களில் இருந்து மக்களை வெளியேற்ற எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகம் முன்பு அ.ம.மு.க., தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தேனி,

தேனி மாவட்டம், மேகமலை வன உயிரின காப்பக பகுதியில் வன வளத்தை பெருக்கும் நடவடிக்கையாக கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பின் அடிப்படையில் வனப்பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்ற வனத்துறையினர் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக மலைக்கிராமங்களில் வாழும் மக்களுக்கு வனத்துறை சார்பில் நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த வன உயிரின காப்பகத்தில் உள்ள மேகமலை, தும்மக்குண்டு ஊராட்சிகளுக்கு உட்பட்ட மலைக்கிராமங்களில் இருந்து மக்களை வெளியேற்ற பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

தங்களை வெளியேற்ற எதிர்ப்பு தெரிவித்து இந்த ஊராட்சிகளுக்கு உட்பட்ட மலைக்கிராமங்களை சேர்ந்த மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை மனுக்கள் அளித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக மக்களை வெளியேற்ற எதிர்ப்பு தெரிவித்து அ.ம.மு.க. மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு அ.ம.மு.க. மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் ஆகியோர் தலைமை தாங்கி பேசினர். வனப்பகுதியில் பல ஆண்டுகளாக வாழும் மக்களுக்கு வன உரிமைச் சட்டத்தின் கீழ் பட்டா வழங்க வேண்டும் என்றும், மக்களை வெளியேற்றக் கூடாது என்றும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வெங்கடேசன், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஜெயராஜ், மாவட்ட செயலாளர் கண்ணன், தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான கதிர்காமு, அ.ம.மு.க. தேனி நகர செயலாளர் காசிமாயன் மற்றும் ஆயிரக்கணக்கான மலைக்கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அ.ம.மு.க. சார்பிலும், விவசாயிகள் சங்கம் சார்பிலும் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மேலும் ஆர்ப்பாட்டத்துக்கு வந்து இருந்த மலைக்கிராம மக்கள் தங்களுக்கு வன உரிமைச் சட்டத்தின் கீழ் பட்டா வழங்க வேண்டும் என்று விண்ணப்ப மனுக்களை அளித்தனர். அதன்படி 400-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டன.

கலெக்டரிடம் மனு அளித்த பின்னர் தங்கதமிழ்செல்வன் நிருபர்களிடம் கூறுகையில், ‘மேகமலை, தும்மக்குண்டு ஊராட்சிகளுக்கு உட்பட்ட 47 கிராமங்களில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கோர்ட்டு தீர்ப்பை காரணம் காட்டி அவர்களை காலி செய்யுமாறு துன்புறுத்தக்கூடாது. வன உரிமைச் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் மக்களை வெளியேற்றவோ, அச்சுறுத்தவோ கூடாது. ஒருவேளை மக்களை வெளியேற்றும் சூழலில் அவர்களுக்கு வசிக்க வீடு, விவசாயம் செய்வதற்கு நிலம் போன்றவை வழங்க வேண்டும். மக்களுக்கு நிவாரணம் வழங்காமல் கட்டாயப்படுத்தி வெளியேற்ற முயற்சித்தால் அடுத்தக்கட்டமாக சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம்’ என்றார்.

அதேபோல், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் கூறுகையில், ‘கோர்ட்டு வழங்கிய எத்தனையோ தீர்ப்புகள் அமல்படுத்தப்படாமல் கிடப்பில் உள்ளது. அப்படி இருக்கும் போது இங்குள்ள மக்களுக்கு எதிரான தீர்ப்பை செயல்படுத்துவதில் அதிகாரிகள் ஏன் இத்தனை வேகம் காட்ட வேண்டும். தீர்ப்பை அமல்படுத்தி மக்களை வெளியேற்ற வேண்டும் என்று இதுவரை யாரும் கோரிக்கை வைக்கவில்லை. இங்குள்ள 60 ஆயிரம் ஏக்கர் நிலங்களை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்று அறிவித்ததே தவறு. எனவே, இந்த தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும். அவ்வாறு சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு செய்யத் தவறினால் விவசாயிகள் சங்கம் சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்’ என்றார்.

Next Story