கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற வதந்தியால் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க பொதுமக்கள் குவிந்தனர்


கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற வதந்தியால் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க பொதுமக்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 7 Jan 2019 11:00 PM GMT (Updated: 7 Jan 2019 8:38 PM GMT)

கலெக்டரிடம் மனு அளித்தால் கடன் தள்ளுபடி செய்யப்படும் என வதந்தியின் காரணமாக புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஏராளமான பெண்கள் உள்பட பொதுமக்கள் மனு கொடுக்க குவிந்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி கஜா புயல் தாக்கியது. இதில் ஏராளமான மின்கம்பங்கள், மரங்கள் போன்றவை சாய்ந்தன. மேலும் குடிசை, ஓட்டு வீடுகள் உள்ளிட்டவை சேதமடைந்ததால், பொதுமக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் மகளிர் சுயஉதவிக்குழுக்களை சேர்ந்த வர்கள் தனியார் நிதிநிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் வாங்கிய கடனை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதையடுத்து கலெக்டர் கணேஷ் மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் வாங்கிய கடன்களை செலுத்த காலஅவகாசம் வழங்கி உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில் நகைக்கடன் மற்றும் விவசாய கடன், மகளிர் சுயஉதவிக்குழு கடன்கள் பெற்றவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் உரிய முறையில் மனு அளித்தால் தள்ளுபடி செய்யப்படும் என புதுக்கோட்டை மாவட்ட பொதுமக்கள் மத்தியில் ஒரு வதந்தி கிளம்பியது. இதை நம்பிய பெண்கள் மற்றும் பொதுமக்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நேற்று காலை 10 மணி முதல் கடன் தள்ளுபடி தொடர்பான மனு அளிக்க குவிந்தனர்.

நேரம் செல்ல செல்ல மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர். மேலும் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் இரு சக்கர வாகனங்கள் உள்பட எந்த வாகனங்களையும் அனுமதிக்கவில்லை. இதனால் வாகனங்களில் வந்தவர்கள் வாகனங்களை கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே நிறுத்தி விட்டு நடந்து சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் நிற்பதற்கு கூட இடம் இல்லாமல் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலை மோதியது. இதனால் அதிகாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர்.

தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் வெளியே வந்து அங்கு நின்று கொண்டிருந்தவர்களிடம் மனுவை பெற்று கொண்டனர். சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வந்ததால் அந்த பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் மத்தியில் நகைக்கடன் மற்றும் விவசாய கடன், மகளிர் சுயஉதவிக்குழு கடன்கள் பெற்றவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் உரிய முறையில் மனு அளித்தால் தள்ளுபடி செய்யப்படும் என வதந்தியை பரப்பியவர்கள் யார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மனு கொடுக்க வருபவர்களுக்கு மனு எழுதி கொடுக்க கலெக்டர் அலுவலகத்தின் வெளியே சிலர் அமர்ந்து இருப்பார்கள். இதேபோல நேற்றும் சிலர் அமர்ந்து இருந்தனர். இவர்கள் ஒரு மனு மனு எழுதி கொடுக்க ரூ.10 வரை வாங்குவார்கள். ஆனால் நேற்று கட்டு கடங்காத மக்கள் கூட்டம் கூடியதால், மனு எழுதி கொடுத்தவர்கள் பொதுமக்களிடம் இருந்து ஒரு மனு எழுத ரூ.10 முதல் ரூ.50 வரை வசூல் செய்தனர்.

இதேபோல் அன்னவாசல் பகுதிகளில் வங்கி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வதந்தி பரவியதால் பொதுமக்கள் ஜெராக்ஸ் கடையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story