தூத்துக்குடியில் பிஷப் இல்லத்தில் வேம்பார் கிராம மக்கள் முற்றுகை ஆசிரியர் பணி நீக்கத்துக்கு எதிர்ப்பு


தூத்துக்குடியில் பிஷப் இல்லத்தில் வேம்பார் கிராம மக்கள் முற்றுகை ஆசிரியர் பணி நீக்கத்துக்கு எதிர்ப்பு
x
தினத்தந்தி 8 Jan 2019 3:00 AM IST (Updated: 8 Jan 2019 2:18 AM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர் பணி நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் உள்ள பிஷப் இல்லத்தில் வேம்பார் கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் கிராம நிர்வாக கமிட்டி தலைவர் பெப்பின்காரு தலைமையில் வேம்பார் தூய ஆவியானவர் பங்கு மக்கள் நேற்று தூத்துக்குடியில் உள்ள மறைமாவட்ட பிஷப் இல்லத்துக்கு வந்தனர். அங்கு வேம்பார் பள்ளிக்கூடத்தில் பணியாற்றி வந்த ஆசிரியர் பணி நீக்கத்தை கண்டித்து திடீரென முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மக்கள் மறைமாவட்ட முதன்மை குரு கிருபாகரனிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் தூய ஆவியானவர் பங்கில் உள்ள பள்ளிக்கூடத்தில் கடந்த 28 ஆண்டுகளாக எந்தவித புகாருக்கும் இடமளிக்காமல் ஆசிரியர் ரவீந்திர ராஜன் என்பவர் பணியாற்றி வந்தார். அவர் பொய்யான குற்றச்சாட்டுகளால் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இதனை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தோம். பொய்யான குற்றச்சாட்டுகளால் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்து இருப்பது வருத்தம் அளிக்கிறது. ஆகையால் அந்த ஆசிரியருக்கு அளிக்கப்பட்டு உள்ள தண்டனையை மறுபரிசீலனை செய்து ஆசிரியரின் வாழ்வாதாரத்துக்கு உத்திரவாதம் அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.

தொடர்ந்து முற்றுகையிட்ட மக்களிடம் முதன்மை குரு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை நேற்று இரவு வரை நீடித்தது.

Next Story