ஆத்தூர் அருகே நர்சிடம் 10 பவுன் நகை பறிப்பு - மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர்கள் கைவரிசை


ஆத்தூர் அருகே நர்சிடம் 10 பவுன் நகை பறிப்பு - மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 7 Jan 2019 10:45 PM GMT (Updated: 2019-01-08T02:48:56+05:30)

ஆத்தூர் அருகே மொபட்டில் பின்னால் உட்கார்ந்து சென்ற நர்சிடம் 10 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் கள் பறித்து சென்றனர்.

செம்பட்டி, 

ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பழனியை சேர்ந்த சரண்யா(வயது 28) என்பவர் டாக்டராக வேலை செய்து வருகிறார். இதே ஆஸ்பத்திரியில், திண்டுக்கல் கிழக்கு கோவிந்தாபுரத்தை சேர்ந்த டெய்சிராணி (53) நர்சாக வேலை செய்கிறார். இவர்கள் செம்பட்டியில் இருந்து மொபட்டில் நேற்று காலை ஆத்தூர் நோக்கி சென்றனர். சரண்யா மொபட்டை ஓட்டினார். டெய்சிராணி பின்னால் அமர்ந்திருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் அவர்களை பின்தொடர்ந்து வந்தனர்.

ஆத்தூர் பூஞ்சோலை அருகே அவர்கள் சென்றபோது மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர்கள் டெய்சிராணி கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலிகளை பிடித்து இழுத்தனர். இதில் டாக்டர் சரண்யா ஓட்டிய மொபட் நிலைதடுமாறி, ரோட்டோரத்தில் சாய்ந்தது. அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் டெய்சிராணி அணிந்திருந்த மொத்தம் 10 பவுன் எடையுள்ள 2 தங்கச்சங்கிலிகளை அந்த மர்ம நபர்கள் பறித்து விட்டு சித்தையன்கோட்டை ரோடு வழியாக தப்பிச்சென்று விட்டனர்.

இதில் டெய்சிராணிக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க் கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு செம்பட்டி-நிலக்கோட்டை ரோட்டில் புதுக்காமன்பட்டி அருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்த எஸ்.புதுக்கோட்டையை சேர்ந்த சரஸ்வதி என்ற பெண்ணிடமும், பச்சமலையான்கோட்டையை சேர்ந்த பழனியம்மாள் என்ற சத்துணவு அமைப்பாளரிடமும் மர்மநபர்கள் தங்கச்சங்கிலிகளை பறித்துச்சென்றனர். இவ்வாறு தொடர்ந்து நடக்கும் நகை பறிப்பு சம்பவங்களால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். 

Next Story